நாடாளுமன்ற தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது ஓ.பன்னீர்செல்வம் மகன் கலந்துகொண்டார்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் அ.தி.மு.க. தலைமை நேர்காணல் நடத்தியது.
சென்னை,
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களம் கண்ட அ.தி.மு.க. இந்த முறை வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பமனு செய்தவர்களிடம் அ.தி.மு.க. தலைமை நேற்று நேர்காணல் நடத்தியது.
கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, பி.வேணு கோபால் எம்.பி. ஆகியோர் நேர்காணலை நடத்தினர்.
ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்
நேற்று நடந்த நேர்காணலில் சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, விழுப்புரம் (தனி), தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோரிடம் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து கேட்கப்பட்டது.
தேனி தொகுதிக்கு விருப்பமனு அளித்திருந்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான ரவீந்திரநாத் குமார் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு நேற்று மதியம் வந்தார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். பின்னர் நேர்காணலில் ரவீந்திரநாத்குமார் பங்கு பெற்றார். நேர்காணலில் தற்போது எம்.பி.க்களாக இருப்பவர்களும் பங்கு பெற்றனர்.
புதியவர்களுக்கு வாய்ப்பு
நேர்காணல் குறித்து, அதில் பங்கேற்ற நாமக்கலை சேர்ந்த அ.தி.மு.க. பெண் நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘நேர்காணலில் எங்களிடம், கட்சி ஒற்றுமைக்காக பாடுபட வேண்டும். யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று மட்டும் சொல்லி இருக்கிறார்கள். ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பி.க்களும் நேர்காணலுக்கு வந்திருக்கிறார்கள். எனவே கட்சி தலைமை புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்’ என்றார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் நேர்காணலில் திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கு விருப்பமனு கொடுத்தவர்கள் பங்கேற்கிறார்கள்.
18 தொகுதிகளுக்கு விருப்பமனு
இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலுடன் நடைபெற உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்களிடம் இருந்து 13-ந் தேதி (நாளை) விருப்பமனுக்கள் பெறப்படும் என்று அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.
இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.25 ஆயிரம். திருவாரூர் தொகுதிக்கு ஏற்கனவே விருப்பமனு பெறப்பட்டு இருப்பதால் அந்த தொகுதிக்கு மட்டும் விருப்ப மனு அளிக்க தேவையில்லை. தேர்தலுக்கு குறுகிய நாட்களே இருப்பதால், விருப்பமனுக்களை அன்றைய தினம் மாலைக்குள் வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியை தக்கவைக்க இடைத்தேர்தல் முடிவு மிக முக்கியமாக கருதப்படுகிறது. எனவே, நாடாளுமன்ற தேர்தலை காட்டிலும், இடைத்தேர்தல் வெற்றியை தான் அ.தி.மு.க. தலைமை மிகவும் எதிர்பார்க்கிறது. அதற்கேற்ப வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது.
Related Tags :
Next Story