பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவம்: அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் அதிகாரியிடம் துணை சபாநாயகர் மனு
பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவம் தொடர்பாக தன்னையும், தனது குடும்பத்தினரையும் தொடர்புபடுத்தி அவதூறு பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மனு அளித்துள்ளார்.
சென்னை,
சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
என் மீதும், என் குடும்பத்தார் மீதும் பரப்பப்பட்டுள்ள அவதூறு குற்றச்சாட்டு தொடர்பாக தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி முழுமையாக விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளேன். இந்த அவதூறை பரப்புவதற்கு தி.மு.க. தான் காரணம்.
கடந்த 25 நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி பாலியல் விவகாரம் வந்தபோது அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலில் கூறியவன் நான். புகார் அளிப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தவன் நான்.
தன்னிலை விளக்கம்
சம்பந்தப்பட்ட பெண் தற்போது அதுபற்றிய குரல் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பெண்ணின் அண்ணனும், நான் தான் அவர்களுக்கு முழுமையாக உதவி செய்தேன் என்று வீடியோவில் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட கலெக்டரை சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்கள். எங்களுக்கு எல்லா உதவிகளையும் பொள்ளாச்சி ஜெயராமன் தான் செய்கிறார் என்று தெரிவித்துள்ளார்கள்.
என்னையும், என் குடும்பத்தையும் அவதூறாக சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட்டவர்கள் குறிப்பாக தி.மு.க. மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோர் இதுவரை எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை. ஆளுங்கட்சி தலையிடுவதாகவும் கூறியுள்ளனர். ஆனால் நாங்கள் தான் புகார் அளித்து, நடவடிக்கையும் எடுக்கவைத்துள்ளோம். தி.மு.க.வை சேர்ந்த குற்றம் செய்தவர்களை மறைப்பதற்காக வேண்டுமென்றே அரசியல் நாடகம் நடத்துகிறார்கள்.
திடீர் அக்கறை ஏன்?
ஆதாரம் இல்லாமல் சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுகளை வெளிபடுத்தி வருகிறார்கள் என்றும் மனுவில் கூறியுள்ளோம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் மூலம் சமூக ஊடகங்களில் எவ்வாறு இது வெளியிடப்படுகிறது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளோம். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டபோது தி.மு.க.வுக்கு இல்லாத அக்கறை தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் திடீரென எங்கிருந்து வந்தது?
உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கூறினால் வரவேற்றிருப்போம். ஆனால் குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதுபோல இதற்கு அரசியல் சாயம் பூசி, ஆளும் கட்சியினரின் பிள்ளைகள் இந்த தவறில் ஈடுபட்டார்கள் என்பதைப்போல ஒரு மாயையை உருவாக்கி உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்க கருணாநிதியின் குடும்பத்தினர் துணைநிற்பது வெளிப்படையான உண்மை.
இதன்மூலம் நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறார்கள். இதில் தி.மு.க.வை சேர்ந்தவர்களும் இருக்கலாம். இந்த வழக்கை சி.பி.ஐ. வேண்டுமானாலும் விசாரிக்கட்டும். உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story