கியாஸ், கேபிள் கட்டணம் குறைப்பு : 1½ கோடி பேருக்கு வேலைவாய்ப்பு - தி.மு.க. தேர்தல் அறிக்கை
1½ கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை,
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலுக்கான 100 அம்சங்கள் கொண்ட 77 பக்க தி.மு.க. தேர்தல் அறிக்கையை நேற்று காலை 10.30 மணிக்கு வெளியிட்டார். முன்னதாக கருணாநிதி, அண்ணாவின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை தி.மு.க. குழு தலைவர் கனிமொழி, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் ராமசாமி உள்பட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மத்திய அரசை வலியுறுத்தி இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழிலேயே செயல்படத்தக்க வகையில் இணை ஆட்சி மொழியாக தமிழை அங்கீகரிக்க தேவையான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்துவோம்.
* ஐகோர்ட்டில் தமிழை நீதிமன்ற மொழியாக்கும் தீர்மானத்தை ஏற்று ஆணை பிறப்பிக்க வலியுறுத்துவோம்.
* கச்சத்தீவை இந்தியாவுக்கு மீட்க கோரி வலியுறுத்துவோம்.
* ரபேல் போர் விமான கொள்முதல் மீது விசாரணை நடத்த வலியுறுத்தப்படும்.
* வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதில், மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வலியுறுத்துவோம்.
* புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து பெற்றுத்தர முயற்சி மேற்கொள்ளப்படும்.
* மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வலியுறுத்துவோம்.
* தொழிலாளர் ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் 8 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்க வலியுறுத்துவோம்.
* 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வலியுறுத்தப்படும்.
* தமிழகத்தில் மேலும் 2 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்துவோம்.
* தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 86 ஆயிரத்து 689 ரூபாயில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வலியுறுத்துவோம்.
* நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலைகளைக் கட்டுக்குள் வைத்திட நிர்வகிக்கப்பட்ட விலை முறை மீண்டும் கொண்டுவர வலியுறுத்துவோம்.
* சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் முறை மாற்றப்பட்டு முன்பு இருந்தது போல் சிலிண்டர் விலையை குறைக்க வலியுறுத்துவோம்.
* வருமான வரிக்கான வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தவும், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு இந்த வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தவும், ஓய்வூதியதாரர்கள் பெறும் ஓய்வூதியத்துக்கு வருமான வரியில் இருந்து முழு விலக்களிக்கவும் வலியுறுத்துவோம்.
* சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அதிகபட்சம் 28 சதவீதம் வரை இருப்பதால் அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பைப் போக்கிட ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை உரிய வகையில் மாற்றி அமைக்க வலியுறுத்துவோம்.
* சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடுகளை தடைசெய்ய வலியுறுத்துவோம்.
* சிறு, குறு விவசாயிகளின் பயிர் கடன்களை முற்றிலுமாக தள்ளுபடி செய்ய வலியுறுத்துவோம்.
* தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.
* 1976-ல் மத்திய அரசு பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்ட கல்வியை, மீண்டும் மாநில பட்டியலக்கு கொண்டு வர வலியுறுத்துவோம்.
* சென்னையில் உள்ளது போல் மதுரையில் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் அமைக்க வலியுறுத்துவோம்.
* மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம்.
* பட்டியல் இன மக்களும், பழங்குடியின மக்களும் தடைகள் ஏதும் இன்றி மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி பெற்றிட கல்வி கட்டணம், தேர்வு கட்டணம் போன்ற கட்டணங்களை செலுத்த தேவையான முழு உதவித்தொகையை மத்திய அரசு வழங்கிட டாக்டர் அம்பேத்கர் இலவச கல்வி திட்டம் என்ற பெயரில் புதிய திட்டம் தொடங்கிட தி.மு.க. வலியுறுத்தும்.
* மாணவர்களின் கல்வி கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்துவோம்.
* தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க 10-ம் வகுப்பு வரை படித்துள்ள 1 கோடி இளைஞர்களை சாலைப் பணியாளர்களாக நியமிக்க வலியுறுத்துவோம்.
* 10-ம் வகுப்பு வரை படித்த 50 லட்சம் கிராமப்புற பெண்களை மக்கள்நல பணியாளர்களாக நியமிக்க வலியுறுத்துவோம்.
* கிராமப் பகுதியில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு சிறு தொழில் தொடங்க ரூ.50 ஆயிரம் வட்டியில்லா கடனாக வழங்க வலியுறுத்துவோம்.
* இந்தியா முழுவதும் சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டு அவை ‘பெரியார்-ஜோதிராவ் பூலே சமத்துவபுரம்’ என பெயரிட வலியுறுத்துவோம்.
* இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீட்டில் ‘கிரீமிலேயர்’ எனப்படும் வருமான வரம்பு கொள்கை அகற்றப்பட தி.மு.க. பாடுபடும்.
* மத்திய அரசின் கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்துவோம்.
* மத்திய அரசில் மீனவர்கள் நலன்களை பாதுகாக்க தனி கேபினட் அமைச்சரின் பொறுப்பில் ஒரு முழு அளவிலான அமைச்சகம் உருவாக்க வலியுறுத்தப்படும்.
* 1964-ம் ஆண்டு இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி இந்தியாவுக்கு திரும்பி அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் தாமதமில்லாமல் இந்திய குடியுரிமை அளிக்க வலியுறுத்துவோம்.
* பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச ரெயில் பயணச் சலுகை வழங்க வலியுறுத்துவோம்.
* சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் உள்ள பெரிய நகரங்களான மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய மாநகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்துவோம்.
* கீழடியில் தொல்லியல் ஆய்வுகள் தொடரவும், அங்கு அருங்காட்சியகம் அமைக்கவும் வலியுறுத்துவோம்.
* கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தும் சமுதாயப் பொறுப்பு திட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் 50 லட்சம் பேருக்கு வாய்ப்பு அளிக்க வலியுறுத்துவோம்.
* சமூக ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் வெளியிடும் ஆபாச செய்திகள் மற்றும் படங்களால் பெருகிவரும் பாலியல் குற்றங்களைத் தடுக்க உரிய சட்டம் இயற்ற வலியுறுத்துவோம்.
* காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்துவோம்.
* மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ முதலிய சுற்றுச்சூழலைக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய திட்டங்களை கைவிட வலியுறுத்தப்படும்.
* வேலையில்லா திண்டாட்டத்தை போக்கிட மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் அனைத்திலும் 5 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வலியுறுத்துவோம்.
* கடந்த 11 ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ள சேது சமுத்திரத் திட்டப் பணிகளை மீண்டும் தொடங்கி விரைந்து நிறைவேற்ற வலியுறுத்துவோம்.
* அண்மையில் உயர்த்தப்பட்ட கேபிள் டி.வி. கட்டணம் முந்தைய அளவுக்கு குறைக்க வலியுறுத்தப்படும்.
* பாலியல் துன்புறுத்தல், குழந்தைகளை பிச்சையெடுக்க வைத்தல், மனித உறுப்புகள் விற்பனை போன்ற பல்வேறு காரணங்களுக்காக நடைபெறும் மனித கடத்தலை தடுக்க சட்டம் கொண்டுவர வலியுறுத்துவோம்.
* மக்களின் ஆதரவை பெறாத சென்னை-சேலம் 8 வழி விரைவுச்சாலை திட்டத்தை தி.மு.க. ஏற்கவில்லை. அதே நேரத்தில், சென்னை-சேலம் இடையே ஏற்கனவே உள்ள நெடுஞ்சாலைகள் அனைத்தையும் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தை பயன்படுத்தி அகலப்படுத்தவும், மேம்படுத்தவும் தி.மு.க. வலியுறுத்தும்.
* தமிழகத்தில் பட்டாசு தொழிலைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ள வலியுறுத்தப்படும்.
* ஏழை நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய இலவச மின்சாரம் வழங்க வலியுறுத்தப்படும்.
* தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினத்தில் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க தி.மு.க. வலியுறுத்தும்.
* ராயபுரம், அம்பத்தூரில் புதிய ரெயில் முனையங்கள் உருவாக நடவடிக்கை எடுக்கப்படும்.
* சென்னை-திருச்சி- மதுரை ரெயில் பாதையில் நாள்தோறும் சதாப்தி விரைவு ரெயில் சேவையை கொண்டுவர வலியுறுத்துவோம்.
இவ்வாறு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.
இதே போன்று சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக தனியாக 16 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தற்போது காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கான திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கொடுங்கையூர் குப்பைமேடு அகற்றப்படும், பெரம்பூரில் பொறியியல் கல்லூரி தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கான திட்டங்களில், திருப்போரூரில் துணை நீதிமன்றம் அமைக்கப்படும். வேளச்சேரி வரை இயங்கும் பறக்கும் ரெயில் திட்டத்தை மகாபலிபுரம் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட கூடபாக்கம் ஊராட்சி கலெக்டர் நகர் பகுதியில் வாழும் மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும். சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் திருமழிசையில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story