சர்க்கரை நோயாளிகளை ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்கலாமா? மத்திய அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு கேள்வி
சர்க்கரை நோயாளிகளை ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்கலாமா? என்று மத்திய அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
மதுரை,
மதுரையை சேர்ந்த கேசவன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், இளம் வயதில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், போட்டித்தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை எழுத செல்கிறார்கள். அந்த சமயத்தில் அவர்கள் சர்க்கரை நோய் பரிசோதனை கருவி, இன்சுலின், தேவையான உணவுகளை எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. இதனால் அவர்கள் திடீரென சோர்வடைந்து, கடுமையான பாதிப்புக்கு உள்ளாக நேரிடுகிறது. இதை தவிர்க்க, மேற்கண்ட பொருட்களை தேர்வு மையங்களுக்கு எடுத்து செல்ல அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கில் கோர்ட்டுக்கு உதவுவதற்காக சர்க்கரை நோய் சிகிச்சைத்துறை நிபுணர்களை ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர்கள் ஆஜராகி, “சர்க்கரை நோய் தாக்கியவர்களுக்கு சில அத்தியாவசிய பொருட்கள் எந்த நேரத்திலும் தேவைப்படும். அந்த சமயத்தில் மருந்து பொருள் உடலுக்குள் செலுத்தப்பட வேண்டும். தாமதிக்கப்படும் பட்சத்தில் நோயின் தாக்கம் அதிகரிக்கும்“ என தெரிவித்தனர்.
நீதிபதிகள் கேள்வி
இதையடுத்து நீதிபதிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகள் வருமாறு:-
இந்தியாவில் மொத்தம் எத்தனை சர்க்கரை நோயாளிகள் உள்ளனர், இதில் தமிழகத்தில் மட்டும் எத்தனை பேர் இருக்கிறார்கள், அவர்களுக்கு போதிய மருத்துவ வசதிகள், தாலுகா மற்றும் மாவட்ட ஆஸ்பத்திரிகளில் உள்ளனவா, சிகிச்சை அளிப்பதற்கு போதுமான டாக்டர்கள் இருக்கிறார்களா, தேர்வு எழுத செல்லும்போது சர்க்கரை நோயாளிகள் குளுக்கோமீட்டர் பொருத்தி செல்ல அனுமதிக்கலாமா?
வருங்காலங்களில் போட்டித்தேர்வு, நுழைவு தேர்வுகளை எழுத செல்லும் சர்க்கரை நோயாளிகள் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதிக்கலாமா?
ஊனமுற்றோர் பட்டியல்
சர்க்கரை நோயாளிகள் அதிகரித்து வரும் சூழலில், அவர்களை ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்கும் திட்டம் உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
முடிவில், இதுகுறித்து மத்திய அரசு பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 4-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story