2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது -சென்னை ஐகோர்ட்


2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது -சென்னை ஐகோர்ட்
x
தினத்தந்தி 22 March 2019 12:13 PM GMT (Updated: 2019-03-22T17:43:41+05:30)

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.

சென்னை,

கடந்த 2016-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது தி.மு.க. வேட்பாளராக டாக்டர் சரவணன்  போட்டியிட்டார். அவர் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸிடம் தோல்வி அடைந்தார்.

ஏ.கே.போஸின் வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன்  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து இருந்தார்.

அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது அ.தி.மு.க. வேட்பாளர்  ஏ.கே.போஸ் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். இதனால் திருப்பரங்குன்றம் தொகுதி காலி இடமாக  அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. 2016-ம் ஆண்டு  சட்டசபை தேர்தலின்போது திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது என சென்னை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் இன்று  தீர்ப்பளித்துள்ளார்.

தன்னை இந்த தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற சரவணனின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பால், தற்போது தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 18  தொகுதிகளுக்கு நடத்தப்படும் இடைத்தேர்தலுடன் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலும் சேர்த்து நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story