பலிகடா ஆக்கவில்லை என்னை பலமான தலைவராக கருதி களமிறக்கி உள்ளனர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


பலிகடா ஆக்கவில்லை என்னை பலமான தலைவராக கருதி களமிறக்கி உள்ளனர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 22 March 2019 10:15 PM GMT (Updated: 2019-03-23T01:59:00+05:30)

பலமான தலைவராக கருதி தன்னை தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் களமிறக்கி உள்ளனர் என்றும், பலிகடா ஆக்கவில்லை என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடியில் 2 பெண் தலைவர்கள் போட்டியிடுவது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தூத்துக்குடி மக்களுக்கு நல்ல திட்டங்களை செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளேன்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் துரதிர்ஷ்டவசமானது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் பா.ஜனதாவுக்கு தொடர்பு கிடையாது. எங்கள் மீது வேண்டுமென்றே விமர்சனங்களை வைத்துள்ளனர். பொதுமக்களின் கருத்துகளுக்கு எதிராக செயல்படமாட்டோம். ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பல பிரச்சினைகளுக்கு தி.மு.க. தான் காரணம். இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதால் பேசவில்லை.

பலிகடா ஆக்கவில்லை

ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு ஸ்டாலின் தான் கையெழுத்து போட்டார். தூத்துக்குடியில் 9 துப்பாக்கிகளுடன் வக்கீல் கைது செய்யப்பட்டு உள்ளார். தூத்துக்குடி அபாயகரமாக இருப்பதாக நீதிபதியே சொல்லி இருக்கிறார். தூத்துக்குடி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

மத்தியில் மீண்டும் மோடி தான் ஆட்சிக்கு வரப்போகிறார். மாநிலத்தில் கூட்டணி கட்சி தான் ஆட்சியில் இருக்கும். பலமான தலைவரை எதிர்த்து கட்சி தலைமை போட்டியிட வைத்துள்ளது. என்னை பலிகடா ஆக்கவில்லை. பலமான தலைவராக கருதி என்னை களமிறக்கி உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் சீட்டுக்காக போட்டி நடக்கிறது. காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வந்ததும் பிரச்சினைகள் மேலும் அதிகரிக்கும்.

எதிரியாக பார்க்கமாட்டோம்

காங்கிரஸ்-தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஏதாவது திட்டங்கள் கொண்டு வரப்பட்டதா? எங்களுக்கு எதிராக கருத்துகள் சொல்பவர்களை எதிரியாக பார்க்கமாட்டோம். தமிழக மக்கள் பா.ஜனதாவை ஏற்றுக்கொள்வார்கள். தூத்துக்குடியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்ததை பெருமையாகவும், தென்மாவட்டம் வளர்ச்சியடைய கிடைத்த வாய்ப்பாகவும் கருதுகிறேன்.

அத்வானியை பா.ஜனதா தொலைத்துவிட்டதாக ஸ்டாலின் சொல்கிறார். தி.மு.க. தான் வாரிசுகளுக்கு வாய்ப்பு கொடுத்து தொண்டர்களை தொலைத்துவிட்டது. அத்வானிக்கு கட்சி மரியாதை தருகிறது. இதை ஏன் அரசியலாக்குகிறீர்கள்.?

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story