‘தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களை மிரட்டக்கூடாது’ அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தல்
‘தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களை மிரட்டக்கூடாது என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இரண்டு கட்ட பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்கள் தயாராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்படி நடவடிக்கை
இதுகுறித்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூறியதாவது:-
தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்புகள் காலையில் தொடங்கி மாலை வரை நடக்கும். இதற்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பயணப்படி, சாப்பாடு வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் வசிக்கும் இடத்தை விட்டு வெகு தூரத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு பணி நியமிக்கப்படுகிறது. இதனால் பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இரவே சென்று தங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது. அவ்வாறு செல்பவர்களுக்கு போதிய வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
தேர்தல் பணிக்கு வர மறுப்பவர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவம் சட்டம் 1951-ன் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டப்படுகிறது. இதுபோன்ற போக்கை கைவிட்டு ஆரோக்கியமாக பணியாற்றும் சூழலை ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story