மாநில செய்திகள்

கொலை மிரட்டல் விடுத்த சினிமா பைனான்சியர் மீதான புகாரை வாபஸ் பெற்றது ஏன்? நடிகை ஸ்ரீரெட்டி விளக்கம் + "||" + Why was the complaint withdrawn? Actress Srirti interpretation

கொலை மிரட்டல் விடுத்த சினிமா பைனான்சியர் மீதான புகாரை வாபஸ் பெற்றது ஏன்? நடிகை ஸ்ரீரெட்டி விளக்கம்

கொலை மிரட்டல் விடுத்த சினிமா பைனான்சியர் மீதான புகாரை வாபஸ் பெற்றது ஏன்? நடிகை ஸ்ரீரெட்டி விளக்கம்
கொலை மிரட்டல் விடுத்த சினிமா பைனான்சியர் மீதான புகாரை வாபஸ் பெற்றது ஏன்? என்பது குறித்து நடிகை ஸ்ரீரெட்டி விளக்கம் அளித்தார்.
சென்னை, 

அதிரடி புகார்கள் கூறி திரையுலகையே அதிர செய்தவர், நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தற்போது ‘ரெட்டி டைரி’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அடிப்படையில் தயாராகிறது.

இந்த நிலையில் சினிமா பைனான்சியர் சுப்பிரமணி உள்பட 2 பேர், தனக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக கூறி கோயம்பேடு போலீசில் புகார் கொடுத்தார். சில மணி நேரங்களிலேயே அந்த புகாரை அவர் திரும்ப பெற்றார். தான் அளித்த புகாரை ஸ்ரீரெட்டி திரும்ப பெற்றது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்து வந்தன. இதுகுறித்து பல தகவல்களும் வெளியானது.

இதுதொடர்பாக நடிகை ஸ்ரீரெட்டி, தயாரிப்பாளர் ரவி தேவன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது நடிகை ஸ்ரீரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

சினிமா பைனான்சியர்

சினிமா பைனான்சியர் சுப்பிரமணி மீதான புகாரை நான் ‘வாபஸ்’ பெற்றது தொடர்பாக பல விரும்பத்தகாத தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு பெண் என்றும் பார்க்காமல் என் குணாதிசயத்தின் மீது கல் எறியப்பட்டு இருக்கிறது. உண்மையை சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

சினிமா பைனான்சியர் சுப்பிரமணி என்ற சரத்பாபு மீது ஐதராபாத் போலீசில் பல வழக்குகள் உள்ளன. பல மோசடிகளில் அவர் ஈடுபட்டது அம்பலமாகி இருக்கிறது. இந்த நிலையில் நான் நடிக்கும் படத்துக்கு சுப்பிரமணி ‘பைனான்ஸ்’ செய்தார். இதற்கிடையில் அவர் மீதான வழக்குகள் தொடர்பாக ஐதராபாத் போலீசார் சென்னைக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது என்னையும், பட தயாரிப்பாளர் ரவி தேவனையும் விசாரித்தனர். நாங்களும் விசாரணைக்கு உட்பட்டோம்.

மிரட்டல் - புகார்

ஆனால் போலீசாரையே நாங்கள் தான் அழைத்து வந்தது போல, எல்லா பிரச்சினைக்கு நாங்களே காரணம் என்பது போல எங்களை சுப்பிரமணி பார்க்க தொடங்கிவிட்டார். அதனைத் தொடர்ந்து பட தயாரிப்பாளர் ரவி தேவனின் வீட்டுக்கும் சென்று அங்கிருந்து பொருட்களை அடித்து நொறுக்கி இருக்கிறார். என்னை, ‘தமிழ் சினிமாவில் நீ இருக்கவே முடியாது’ என்று மிரட்டல் விடுத்தார்.

தேவையில்லாத பிரச்சினைகள் எதற்கு? எனும் அடிப்படையில் தான் அவரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம். ஆனால் திடீரென்று அவர் ஆத்திரம் அடைந்து எங்களை தாக்க தொடங்கிவிட்டார். எனது உடையை கிழித்து விட்டார். எனவே தான் போலீசுக்கு தகவல் கொடுத்தேன். புகாரும் அளித்தேன்.

மனைவி கண்ணீர்

அதனைத் தொடர்ந்து சுப்பிரமணியின் மனைவி என்னை போனில் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்தார். ‘ஏற்கனவே அவர் 4 மாதம் சிறையில் இருந்துள்ளார். வழக்குகளும் உள்ளன. இனியும் வழக்கு போடப்பட்டால் குண்டர் சட்டத்தில் அவர் சிறைக்கு செல்ல நேரிடும். எனது குடும்பம் என்னாவது? அவரால் எந்த பிரச்சினையும் இனி ஏற்படாது. நான் உறுதி தருகிறேன்’ என்று அழுது பேசினார்.

பெண்கள் மீதான பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வரும் எனக்கு ஒரு பெண் என்னிடம் கண்ணீர் விட்டு அழுவதை ஏற்கமுடியவில்லை. எனவே தான் போலீஸ் உதவி கமிஷனரை உடனடியாக சந்தித்து அந்த புகாரை ‘வாபஸ்’ பெற்றேன். இதைத்தவிர எந்த காரணமும் இல்லை. இதுதான் உண்மை.

இவ்வாறு அவர் கூறினார்.

உண்மை இல்லை

‘ரெட்டி டைரி’ படத்தின் தயாரிப்பாளர் ரவி தேவன் கூறுகையில், “நான் வீட்டில் இல்லாத நேரம் சுப்பிரமணி ஆட்களுடன் வந்து என் வீட்டை தாக்கிவிட்டார். பின்னர் ஸ்ரீரெட்டி வீட்டில் நடந்த பேச்சுவார்த்தையிலும் என்னை தாக்கினார். ஆனால் சுப்பிரமணியின் மனைவி எங்களிடம் வற்புறுத்தி கேட்டதால் தான் புகாரை ‘வாபஸ்’ பெற்றோம். மற்றபடி ‘ஸ்ரீரெட்டி வீட்டில் நாங்கள் அனைவரும் மது அருந்தினோம்’, ‘போலீசார் எங்களை எச்சரித்தனர்’ என்பன போன்று வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. தேவைப்பட்டால் சுப்பிரமணி பேச்சுவார்த்தைக்கு வந்தபோது பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை போலீசாரிடம் சமர்ப்பிப்போம்” என்றார்.

உலகம் முழுவதும் பிரபலம் “நான் ஏன் விளம்பரம் தேட போகிறேன்?” ஸ்ரீரெட்டி கேள்வி

சினிமா பைனான்சியர் மீதான புகாரை வாபஸ் பெற்றது ஏன்? என்பது குறித்து நடிகை ஸ்ரீரெட்டி நேற்று பேட்டியளித்தார். அப்போது ‘மீடியாவை பயன்படுத்தி நீங்கள் விளம்பரம் தேட முயற்சி செய்கிறீர்களா?’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘நான் ஏன் விளம்பரம் தேட போகிறேன். என் பெயருக்கு ஒரு தனி அடையாளம் இருக்கிறது. உலகம் முழுவதும் பிரபலமான ஆள் நான். இப்படியா நான் விளம்பரம் தேடனும், போங்கப்பா...’, என்று கூலாக பதில் அளித்தார்.

‘பேச்சுவார்த்தையில் நீங்கள் மது அருந்தினீர்களாமே...’ என்ற கேள்விக்கு, ‘அய்யோடா... அப்படி எல்லாம் இல்லப்பா...’ என்று சிரித்தபடி பதில் அளித்தார். ‘வளசரவாக்கத்தில் நீங்கள் தங்கியுள்ள இல்லத்துக்கு 4 மாதங்களாக சுப்பிரமணி தான் வாடகை கொடுக்கிறாராமே...’ என்ற கேள்விக்கு, ‘கடைசி 4 மாதம் அவர் சிறையில் இருந்தார். பின்பு எப்படி எனக்கு பணம் கொடுக்கமுடியும்?’ என்று எதிர் கேள்வி கேட்டார்.