மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி எப்போது? அதிகாரி தகவல்


மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி எப்போது? அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 7 April 2019 4:15 AM IST (Updated: 7 April 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி எப்போது நடைபெறும் என்பது குறித்து அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான தயாரிப்பு பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. சென்னையில் 3 நாடாளுமன்ற தொகுதிக்கும், பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் சென்னையில் உள்ள 3 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகளுக்கு, தேர்தல் பணிக்காக மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனத்தை சார்ந்த 20 ஆயிரத்து 271 பேர் தேர்தல் அலுவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த தேர்தல் அலுவலர்களுக்கு கடந்த மாதம் 24-ந்தேதி முதல்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த நிலையில் 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சின்னம் பொருத்தும் பணி

தேர்தல் அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு சென்னையில் 16 இடங்களில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் தபால் ஓட்டு குறித்த தகவல்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 14 மற்றும் 17-ந்தேதிகள் 3 மற்றும் 4-ம் கட்டமாக நடத்தப்பட உள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்துவதற்காக சின்னம் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொது பார்வையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சின்னம் பொருத்தும் பணி வருகிற 10-ந்தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story