பெரியார் சிலை உடைப்பு அரசியல் கட்சியினர் கண்டனம்
பெரியார் சிலை நேற்று உடைக்கப்பட்டதற்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் அரசு மருத்துவமனைக்கு அருகே 1998-ம் ஆண்டு திராவிட கழக தலைவர் வீரமணி தலைமையில் பெரியார் சிலை திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெரியார் சிலையின் தலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
இதையடுத்து நேற்று காலை இது பற்றி அறிந்த திராவிடர் கழகத்தினர் அங்கு திரண்டனர். பெரியார் சிலையை சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
சாலை மறியல்
இதற்கிடையே திராவிடர் கழகத்தினர் அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
சிலையை உடைத்தது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த முத்து உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வருவாய்த்துறையினர் சார்பில் சிலையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
சிலை உடைக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
மு.க.ஸ்டாலின்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்:-
தேர்தல் களத்தில் தோல்வி பயம் கண்டவர்கள், அமைதியைக் குலைக்கும் வகையில் இழிவான செயல்களில் ஈடுபடுவது வழக்கம். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரி அருகே நிறுவப்பட்டிருந்த பெரியார் சிலையின் தலை சிதைக்கப்பட்டிருப்பது, அத்தகைய இழிவான செயல்களின் முன்னோட்டமாகத் தெரிகிறது.
மிக மோசமான இந்தச் செயலை தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய செயல்பாடுகள் மூலம், தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டின் பொது அமைதியைக் குலைத்து, வன்முறையைத் தூண்ட நினைக்கும் சக்திகளை ஒடுக்க வேண்டிய கட்டாயமும், பொறுப்பும் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது.
டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயல் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு அமைதியாக இருப்பதை சகித்துக்கொள்ள முடியாத சக்திகள் தான் இந்த சமூக விரோத செயலை செய்துள்ளனர். இத்தகைய செயல்களை தமிழக அரசும், காவல்துறையும் இனியும் அனுமதிக்கக்கூடாது.
கே.எஸ்.அழகிரி
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-
பெரியாரின் சிலையின் தலையை துண்டிக்கிற மிகக் கொடூரமான நிகழ்வு நடந்திருக்கிறது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கடுமையாக கண்டிக்கிறேன். காவல்துறையினர் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
கி.வீரமணி
மேலும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோரும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story