முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்


முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்
x
தினத்தந்தி 11 April 2019 3:45 AM IST (Updated: 11 April 2019 12:49 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன் நீக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்து உள்ளனர்.

சென்னை, 

கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் கோ.அய்யப்பன். முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் கடந்த 2011-ம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தவர். இவர் தனது ஆதரவாளர்களுடன் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் தி.மு.க.வில் இணைய திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் கோ.அய்யப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தலைமையில், வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, கோ.அய்யப்பன் மற்றும் கடலூர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் டி.நாகரத்தினம் ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கட்சியில் இருந்து நீக்கம்

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க.வின் கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும், கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் கோ.அய்யப்பன், மாவட்ட மகளிர் அணி செயலாளரும், கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினருமான டி.நாகரத்தினம் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கட்சி தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story