பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி கடும் தாக்கு “பணக்காரர்களுக்காகத்தான் ஆட்சி நடத்தினார்”


பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி கடும் தாக்கு “பணக்காரர்களுக்காகத்தான் ஆட்சி நடத்தினார்”
x
தினத்தந்தி 12 April 2019 10:30 PM GMT (Updated: 2019-04-13T01:08:51+05:30)

தமிழகத்தில் ஒரே நாளில் 4 இடங்களில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக தாக்கிப்பேசினார்.

கிருஷ்ணகிரி,

தமிழகத்தில் வரும் 18-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தலும், 18 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடக்கிறது.

இதற்கான பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி நேற்று ஒரே நாளில் கிருஷ்ணகிரி, சேலம், தேனி, மதுரை என 4 இடங்களில் பிரசாரம் செய்தார்.

கிருஷ்ணகிரியில் பிரசாரம்

அவர், கிருஷ்ணகிரியில் அந்த நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செல்லகுமார் மற்றும் ஓசூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஏ.சத்யா ஆகியோரை ஆதரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியா பலவித கலாசாரம், மொழி ஆகியவற்றை கொண்ட ஒரு அற்புதமான நாடு. மொழியாலும், கலாசாரத்தாலும் மாநிலங்களுக்கு மாநிலங்கள் வேறுபட்டாலும் பண்பாட்டை நாம் போற்றி பாதுகாத்து வருகிறோம். தமிழ் மொழியும், தமிழக மக்களின் கலாசாரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் தமிழக மக்களின் குரல் இதுவரை டெல்லியில் ஓங்கி ஒலிக்கவில்லை. இனி தமிழர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்.

அடிமைப்படுத்த முடியாது

தமிழர்களின் குரலை புறக்கணிப்பது எப்படி சரியான இந்தியாவின் அடையாளமாக இருக்க முடியும்?. எனவேதான் தமிழ், தமிழக மக்கள், அவர்கள் கலாசாரத்தை நான் உயர்வாக மதிக்கிறேன். ஆனால் பிரதமர் மோடி நாடு முழுவதும் ஒரே சிந்தனையை, ஒரே கலாசாரத்தை திணிக்க நினைக்கிறார்.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வை அவர் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார். ஆனால், தமிழக மக்களை அவரால் அடிமைப்படுத்தி விட முடியாது. இங்குள்ள மக்கள் வெறுப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்கள் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள். மோடி கடந்த 5 ஆண்டுகளில் அனில் அம்பானி, நீரவ் மோடி, மெகுல்ஜோக்சி போன்ற பணக்காரர்களுக்காக மட்டுமே ஆட்சி செய்திருக்கிறார்.

ஜி.எஸ்.டி.யால் பாதிப்பு

தமிழ்நாட்டை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தங்களின் உரிமைகளுக்காக போராடிய போது அதை மோடி கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இந்த பா.ஜனதா ஆட்சியில் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. பண மதிப்பு நீக்கம் என்று அறிவித்து மோடி நாட்டு மக்களுடைய உரிமையை பறித்தார். ஜி.எஸ்.டி. என்ற ‘கப்பார் சிங் டேக்ஸ்’ மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை நலிவடைய செய்திருக்கிறார். தமிழகத்தில் திருப்பூர் நகரம் ஜவுளி தொழில் நகரம் ஆகும்.

இன்று ஜி.எஸ்.டி.யால் அந்த நகரமே முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல பட்டு தலைநகரமான காஞ்சீபுரமும் தொழில் துறையில் முடங்கி கிடக்கிறது. இதன் மூலம் லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் திருப்பூர், காஞ்சீபுரம் ஆகிய நகரங்கள் மீண்டும் தொழில் துறையில் உயிர் பெறும். அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

நியாய யோஜனா திட்டம்

இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 20 சதவீதம் குடும்பங்களுக்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ‘நியாய யோஜனா’ திட்டம் மூலம் ரூ.72 ஆயிரம் வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்படும். இதுதான் வறுமையின் மீது காங்கிரஸ் கட்சி நடத்தக்கூடிய ‘துல்லிய தாக்குதல்’ ஆகும். அதிலும் பெண்களுக்கு நியாயம் வேண்டும் என நான் விரும்புகிறேன். அதனால் இந்த பணம் பெண்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்.

நியாய யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும்போது ஏழை மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். இது ஒரு புதிய பொருளாதாரத்துக்கு வழிகாட்டும். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும். இதையும் தாண்டி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நாங்கள் சில யோசனைகளை பரிசீலித்துக்கொண்டிருக்கிறோம்.

தனி பட்ஜெட்

தமிழகத்தில் விவசாயிகள் பல்வேறு இக்கட்டான சூழலில் உள்ளனர். அ.தி.மு.க. அரசு விவசாயிகளை அவமானப்படுத்தி வருகிறது. விவசாயிகளின் துயரை துடைக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ.6 ஆயிரம் கோடி மோடி அரசால் முடக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளுக்கு என தனி பட்ஜெட் கொண்டு வரப்படும். அதே போல காங்கிரஸ் ஆட்சியில் முன்பு இருந்தவாறு ரெயில்வேக்கு என்று தனி பட்ஜெட் கொண்டு வரப்படும்.

இந்த கூட்டணி மக்களுடன் அமைந்துள்ள கூட்டணி. நாங்கள் (காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி) சுதந்திரத்திற்காகவும், நியாயத்திற்காகவும், நீதிக்காகவும் போராடும் கூட்டணி. இறுதியாக நான் ஒன்றை கூறி கொள்ள விரும்புகிறேன். தமிழகத்தை நாக்பூரில் இருப்பவர்கள் (ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்) ஆட்சி செய்ய விடமாட்டோம்.

அன்பு காட்டுவார்கள்

தமிழகத்தை தமிழக மக்கள்தான் ஆட்சி செய்வார்கள். தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்ததும் இதற்காகவே. தமிழர்களின் முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்வார். தமிழக மக்களுக்கு அரசியலை தாண்டி எங்களது குடும்பத்தின் மீது அன்பு உண்டு. அதே அன்பை என் மீதும் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

சேலத்தில் பிரசாரம்

சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரோட்டில் உள்ள மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசும்போது, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியை நினைவுகூர்ந்து பேசினார். அப்போது அவர், “தலைவர் கருணாநிதிக்கு இழைக்கப்பட்ட அவமானத்தை மு.க. ஸ்டாலின் இங்கு குறிப்பிட்டார். இதை நான் ஒரு மகனின் உணர்வாக பார்க்கிறேன். தன்னுடைய தந்தைக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்ற வேதனையை அவரது பேச்சின் மூலம் அறிந்தேன். நான் மு.க.ஸ்டாலினுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் அவர்கள் உங்கள் தந்தையை மட்டும் அவமானப்படுத்தவில்லை. உங்கள் தந்தை ஒரு சாதாரண மனிதர் அல்ல. அவர் தமிழகத்தின் குரலை ஓங்கி ஒலிக்க செய்தவராக இருந்தார். கருணாநிதியை அவமானப்படுத்தியது, தமிழர்களையே அவமதித்ததாக நான் கருதுகிறேன். இது யாராக இருந்தாலும், அவர் எந்த கட்சியில் இருந்தாலும் இது தமக்கு ஏற்பட்ட அநீதி என்று ஒவ்வொரு தமிழனும் உணர்வார்கள்” என குறிப்பிட்டார்.

நீட் தேர்வு

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பற்றி குறிப்பிட்ட ராகுல் காந்தி, “ எங்கள் தேர்தல் அறிக்கை மூடிய அறைக்குள் உருவாக்கப்பட்டது அல்ல. இது வெளிப்படையானதாகவும், லட்சக்கணக்கான மக்களின் கருத்துக்களை உள்வாங்கிய அறிக்கையாகவும் அமைந்துள்ளன” என குறிப்பிட்டார்.

நீட் தேர்வின் காரணமாக மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதையும் நினைவுகூர்ந்த ராகுல் காந்தி, “‘நீட் தேர்வு தேவையா, தேவை இல்லையா என்பதை காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளோம்” என்று கூறினார்.

தொடர்ந்து தேனி, மதுரை திருப்பரங்குன்றம் பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி ராகுல் காந்தி பேசினார்.

ராகுல்காந்தி பேச்சு மொழிபெயர்ப்பில் குழப்பம்

சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி ஆங்கிலத்தில் பேசியதை டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. தமிழில் மொழி பெயர்த்தார். அப்போது ராகுல்காந்தி தமிழ்நாடு, நாக்பூரில் இருந்து இயக்கப்பட வேண்டும் என்று பா.ஜனதாவினர் சொல்கிறார்கள் என்று பேசினார். இதை இளங்கோவன் மொழி பெயர்த்தபோது, நாக்பூர் என்பதை நாகூர் என தவறாக கூறினார்.

இதேபோல் ஒவ்வொரு குடும்பத்தின் வங்கி கணக்கிலும் ரூ.72 ஆயிரம் செலுத்தப்படும் என்பதை, அவர் ரூ.72 ஆயிரம் கோடி என்றும் தவறாக மொழிபெயர்த்து கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து தவறை சரி செய்துக்கொண்டார்.

Next Story