புதிய புரட்சிக்கான விதையை மக்கள் விதைக்க வேண்டும் தேர்தல் பிரசாரத்தில், கமல்ஹாசன் பேச்சு


புதிய புரட்சிக்கான விதையை மக்கள் விதைக்க வேண்டும் தேர்தல் பிரசாரத்தில், கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 14 April 2019 9:12 PM GMT (Updated: 14 April 2019 9:12 PM GMT)

புதிய புரட்சிக்கான விதையை மக்கள் விதைக்க வேண்டும் தேர்தல் பிரசாரத்தில், கமல்ஹாசன் பேச்சு

சென்னை, 

புதிய புரட்சிக்கான விதையை மக்கள் விதைக்க வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தில், கமல்ஹாசன் பேசினார்.

சென்னையில் பிரசாரம்

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி மவுரியாவை ஆதரித்து ஓட்டேரியிலும், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் லோகரங்கனை ஆதரித்து செங்குன்றம் பஸ் நிலையம் அருகிலும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வக்கீல் ஸ்ரீதரை ஆதரித்து அம்பத்தூர் ஓ.டி. பகுதியிலும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று திறந்தவேனில் சென்று பிரசாரம் மேற்கொண்டார்.

கமல்ஹாசன் பேச்சு

திறந்த வேனில் நின்றபடி ஓட்டேரியில் ‘டார்ச் லைட்’ சின்னத்துக்கு ஆதரவு திரட்டி கமல்ஹாசன் பேசியதாவது:-

வேறு ஊர்களில் பிரசாரம் செய்யும் போது கூட, வடசென்னை பற்றிய பேச்சு என்னை அறியாமல் வந்து கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் இங்கே இருக்கும் அவலம். என் மக்கள் இங்கே வாழும் சூழல்.

கொடுங்கையூர் குப்பை கிடங்கை வளமான மூலதனமாக மாற்ற முடியும் என்பது எங்களுக்கு தெரியும்.

மக்கள் புதிய புரட்சிக்கான விதையை இந்த தமிழ் புத்தாண்டில் விதைக்க வேண்டும். பிறக்கப் போகும் புதிய தமிழகத்துக்கு வித்திடும் நாளாக தமிழ் புத்தாண்டு அமையட்டும். மக்கள் மனதில் இருக்கும் கொந்தளிப்பு அவர்களது கண்ணில் எனக்கு தெரிகிறது.

ஆதங்கம்

எனக்கு வரும் கூட்டம் சினிமாக்காரனை பார்க்க வரும் கூட்டம் என்று பல பேர் சொல்கிறார். அது இல்லை. என்னை பார்க்க வேண்டும் என்றால் ஏ.சி. தியேட்டரில் உட்கார்ந்து பார்க்கலாம். ஆனால் நீங்கள் நாளைய தமிழகத்தை பற்றி எனது பேச்சை கேட்பதற்காக இந்த வெயிலிலும் வந்திருக்கிறீர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து கமல்ஹாசன் பிரசாரத்தில் பேசும்போது, ‘எங்கே மக்களுக்கு இடைஞ்சலாக இருக்குமோ? எங்கு வெயில் அதிகம் இருக்குமோ? அங்கு தான் எங்களுக்கு அனுமதி தருகிறார்கள்’ என்று ஆதங்கத்துடன் கூறினார்.

Next Story