கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஆன்லைனில் என்ஜினீயரிங் கலந்தாய்வு அமைச்சர் தகவல்


கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஆன்லைனில் என்ஜினீயரிங் கலந்தாய்வு அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 20 April 2019 11:45 PM GMT (Updated: 20 April 2019 11:41 PM GMT)

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்படும் என உயர்க்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழகம் என்ஜினீயரிங் கலந்தாய்வை நடத்தியது. கடந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இந்தநிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கும், உயர்க்கல்வி துறைக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் என்ஜினீயரிங் கலந்தாய்வை நடத்தாது என துணைவேந்தர் சூரப்பா தெரிவித்தார்.

இதையடுத்து நடப்பாண்டுக்கான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தும் என உயர்கல்வி துறை திட்டவட்டமாக அறிவித்தது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியான நிலையில், என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும்? கலந்தாய்வு எப்போது நடைபெறும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் உயர்க்கல்வி துறை அமைச்சர் அன்பழகன், செயலாளர் மங்கத்ராம் சர்மா ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆலோசனை முடிந்ததும் அமைச்சர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

என்ஜினீயரிங் கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஆன்லைன் மூலமாக மட்டுமே கலந்தாய்வு நடைபெறும். இனிவரக்கூடிய ஆண்டுகளிலும் இதே முறைதான் கடைப்பிடிக்கப்படும்.

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி? எப்போது? என்பது குறித்து விரிவாக தெரிவிக்கப்படும். கலந்தாய்வு கட்டணம் மற்றும் படிப்புக்கான கட்டணம் எதிலும் மாற்றம் இருக்காது. கலந்தாய்வு சிறப்பாக நடத்தி முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டு மே மாதம் 3-ந் தேதி முதல் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அதே தேதியில்தான் இந்த ஆண்டும் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், இதுகுறித்து முறையான அறிவிப்பை உயர்க்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் வெளியிடலாமா? என்பது குறித்து தேர்தல் ஆணையத்திடம் உயர்க்கல்வி துறை கேட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு இன்று (ஞாயிற்றுக் கிழமை) வெளியாக வாய்ப்பு உள்ளது.

Next Story