மாநில செய்திகள்

குழந்தைகளை லட்சக்கணக்கில் பேரம் பேசி விற்ற நர்சு ‘வாட்ஸ்-அப் ஆடியோ’ வெளியானதால் சிக்கினார் + "||" + Nurse who sold billions of dollars for children

குழந்தைகளை லட்சக்கணக்கில் பேரம் பேசி விற்ற நர்சு ‘வாட்ஸ்-அப் ஆடியோ’ வெளியானதால் சிக்கினார்

குழந்தைகளை லட்சக்கணக்கில் பேரம் பேசி விற்ற நர்சு ‘வாட்ஸ்-அப் ஆடியோ’ வெளியானதால் சிக்கினார்
குழந்தைகளை லட்சக்கணக்கில் பேரம் பேசி விற்ற நர்சு, கணவருடன் கைது செய்யப்பட்டார். ‘வாட்ஸ்-அப் ஆடியோ’ வெளியானதால் சிக்கினார்.
ராசிபுரம், 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55). நகர கூட்டுறவு வங்கியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அமுதவள்ளி (50). பெண் செவிலியர் உதவியாளராக (நர்சு) பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்.

அமுதவள்ளி, தர்மபுரியை சேர்ந்த சதீஷ்குமாரிடம் குழந்தையை விற்பனை செய்வது தொடர்பாக பேசிய ‘வாட்ஸ்-அப் ஆடியோ’ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணை

இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பள்ளிபாளையம், சேலம், பரமத்திவேலூர், ராசிபுரம் பகுதிகளில் நர்சாக பணியாற்றிய அமுதவள்ளி 2012-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றதும், அதன் பிறகு வறுமையில் வாடும் குடும்ப பெண்களிடம் இருந்து குழந்தைகளை வாங்கி, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.

3 குழந்தைகள் விற்பனை

கொல்லிமலையை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவரிடம் இருந்து 2 பெண் குழந்தைகளை வாங்கி, அந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.1½ லட்சம், ரூ.2 லட்சம் கொடுத்ததும், அந்த குழந்தைகளை ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவரிடம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு லட்சக்கணக்கில் பேரம் பேசி விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த உறவினர் ஒருவரிடம் இருந்து குழந்தையை வாங்கி, ஓமலூரில் பதிவு செய்து மேட்டூரை சேர்ந்த ஒருவரிடம் விற்றுள்ளார். இதையடுத்து அமுதவள்ளி, ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த 3 குழந்தைகளை விற்பனை செய்ததில் அமுதவள்ளிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தாலும், ‘வாட்ஸ்-அப் ஆடியோ’வில் அமுதவள்ளி 30 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருவதாக தெரிவித்து இருப்பதாலும், அமுதவள்ளி, ரவிச்சந்திரனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிறப்பு சான்றிதழ்

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், அமுதவள்ளி ஒரு குழந்தையை மட்டும் சட்டப்படி விற்பனை செய்து உள்ளார். மற்ற குழந்தைகளை சட்டத்துக்கு புறம்பாக விற்பனை செய்து இருப்பது தெரியவந்து இருக்கிறது. இதில் அவரது கணவருக்கும் தொடர்பு உள்ளது. எனவே இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

‘வாட்ஸ்-அப் ஆடியோ’வில் பேசிய அமுதவள்ளி, நகராட்சி அதிகாரிகளை சரிக்கட்டி பிறப்பு சான்றிதழில் மோசடி செய்து இருப்பதால், ராசிபுரம் நகராட்சியில் சமீபகாலமாக கொடுக்கப்பட்ட பிறப்பு சான்றிதழ்களை சரிபார்க்கவும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் போலீசார் திட்டமிட்டு உள்ளனர். அமுதவள்ளி, ரவிச்சந்திரன் இருவரும் வேறு எங்கெல்லாம் குழந்தைகளை வாங்கி விற்பனை செய்து உள்ளார்கள்? இந்த விவகாரத்தில் யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து மேற்கொண்டு உள்ளனர்.

ஆண் குழந்தைக்கு ரூ.4 லட்சம்

‘வாட்ஸ்-அப் ஆடியோ’ வெளியானதால் சிக்கிய அமுதவள்ளி அதில் பேசும்போது குழந்தையின் நிறம், ஆரோக்கியம் ஆகியவற்றை வைத்து விலை நிர்ணயம் செய்வதாக குறிப்பிட்டு உள்ளார். கருப்பாக உள்ள ஆண் குழந்தைகளுக்கு ரூ.3½ லட்சம் முதல் ரூ.3¾ லட்சம் வரையிலும், ஆரோக்கியமாகவும், சிவப்பாகவும் உள்ள ஆண் குழந்தைகளுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.4¼ லட்சம் வரையிலும், பெண் குழந்தைகளுக்கு ரூ.2¾ லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலும் கேட்பார்கள் எனவும் சொல்கிறார். இதற்கு முன்பணமாக ரூ.30 ஆயிரம் கொடுத்து பதிவு செய்ய வேண்டும் என்கிறார்.

ராசிபுரம் நகராட்சியில் இருந்து 30 நாட்களில் குழந்தைக்கான பிறப்பு சான்றிதழை ஆன்- லைனில் பெற்று தருவதாகவும், அதற்கு தனியாக ரூ.70 ஆயிரம் செலவாகும் என்கிறார். அவ்வாறு சான்றிதழ் பெற்று விட்டால் வெளிநாடுகளுக்கு கூட குழந்தைகளை கொண்டு செல்லலாம். எந்த பிரச்சினையும் வராது என்பது போல அந்த உரையாடல் அமைந்து உள்ளது.