தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி


தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி
x
தினத்தந்தி 9 May 2019 8:21 AM GMT (Updated: 9 May 2019 8:21 AM GMT)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்த மதுரை ஐகோர்ட் அனுமதி வழங்கியது.

மதுரை,

தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமாபாபு, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே 22-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்திய பொதுமக்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் கல்லூரி மாணவி உட்பட 16 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை 2018 ஆகஸ்ட் 14ல் சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது. அப்போது சி.பி.ஐ. 4 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இந்த காலக்கெடு 2018 டிசம்பர் 14-ல் முடிந்தது. காலக்கெடு முடிந்து 5 மாதங்கள் கடந்தும் துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஒரு போலீஸ் அதிகாரி மீது கூட சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு நெருங்குகிறது. இருப்பினும் துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. தூத்துக்குடி சம்பவத்தில் மனித உரிமை மீறல்கள் அதிகளவில் நடைபெற்றுள்ளன.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வருகிற 22-ந்தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்த முடிவு செய்து, தூத்துக்குடி சிதம்பர நகர் வி.வி.டி. சந்திப்பு அல்லது எஸ்.வி.ஏ. பள்ளி மைதானம் அல்லது தூத்துக்குடி நகரில் ஏதாவது ஒரு மண்டபத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல் துறையினரிடம் ஏப்ரல் 26-ந் தேதி மனு அளிக்கப்பட்டது.

இருப்பினும் இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனால் இந்த 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் மே 22-ந் தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சாமிநாதன், தண்டபாணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டத்தை வருகிற 22-ந்தேதி தூத்துக்குடி பகுதியில் உள்ள உள்கூட்ட அரங்கில் காலை 9 மணி முதல் 11 மணி வரை நடத்த போலீசார் அனுமதி வழங்கலாம். இந்த கூட்டத்தில் அதிகபட்சம் 250 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். கூட்டம் நடத்துவோர் போலீசாரின் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

Next Story