இலங்கை இனப்படுகொலைக்கு காரணமான போர்க் குற்றவாளிகளை தண்டிக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


இலங்கை இனப்படுகொலைக்கு காரணமான போர்க் குற்றவாளிகளை தண்டிக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 May 2019 2:45 AM IST (Updated: 15 May 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை இனப்படுகொலைக்கு காரணமான போர்க் குற்றவாளிகளை தண்டிக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இனப்படுகொலை

இலங்கையில் கண்ணியமாக வாழும் உரிமை கோரியதற்காக 1½ லட்சம் அப்பாவித் தமிழர்களை சிங்களப் படையினர் கொடூரமான முறையில் இனப்படுகொலை செய்ததன் 10-ம் ஆண்டு நினைவு நாள் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் கடைபிடிக்கப்படுகிறது. உலகின் மிகக்கொடிய இனப்படுகொலை நிகழ்ந்து 10 ஆண்டுகள் ஆகியும் அதற்கு காரணமான கொடியவர்கள் தண்டிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

கொல்லப்பட்ட ஈழச் சொந்தங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்பதற்காக இலங்கை அரசு மீது இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இனப்படுகொலை நடந்த சில நாட்களில் பசுமைத் தாயகம் அமைப்பின் மூலம் பா.ம.க. வலியுறுத்திக் கொண்டிருந்தது.

2 ஆண்டு காலக்கெடு

பசுமைத் தாயகம் அமைப்பு மேற்கொண்ட முன்னெடுப்புகளாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆதரவாலும் இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் ராஜபக்சேவை வணங்கி, பரிசுப்பெட்டிகளை வாங்கி வந்ததையும், ஐ.நா.வின் பொதுச்செயலாளரை சந்திப்பதாகச் சென்று அதன் வாயில்காப்போனிடம் மனு கொடுத்து வந்ததையும் தவிர துரும்பைக் கூட அசைக்கவில்லை.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீதான நீதி விசாரணைகள் குறித்து கடந்த மார்ச் மாதம் விவாதித்த ஐ.நா மனித உரிமைப் பேரவை, அடுத்த 2 ஆண்டுகளில் நீதி விசாரணையை முடித்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயித்துள்ளது. ஆனால், அதன்பின்னர் 2 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், அதற்கான நடவடிக்கைகள் எதையும் சிங்களப் பேரினவாத அரசு மேற்கொள்ளவில்லை; இனி வரும் காலங்களிலும் சிங்கள அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது.

இந்தியா மேற்கொள்ள வேண்டும்

இலங்கை இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையை அடுத்தடுத்த கட்டங்களை கடந்து ‘தி ஹேக்’ நகரில் உள்ள பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணைக் குழுவினர் திரட்டிய ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் ராஜபக்சே சகோதரர்கள், சரத் பொன்சேகா உள்ளிட்ட போர்க் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.

இதற்கான நடவடிக்கைகளை ஈழத்தமிழர்களின் தந்தை நாடான இந்தியா மேற்கொள்ள வேண்டும். அது தான் சிங்கள வெறி அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு, அவர்களின் 10-வது நினைவு நாளில் செலுத்தப்படும் சிறப்பான வீரவணக்கமாக அமையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story