சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து ‘நான் சொன்னது சரித்திர உண்மை’ தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் உறுதி


சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து ‘நான் சொன்னது சரித்திர உண்மை’ தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் உறுதி
x
தினத்தந்தி 16 May 2019 12:15 AM GMT (Updated: 15 May 2019 11:20 PM GMT)

“சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் சொன்னது சரித்திர உண்மை” என்று தேர்தல் பிரசாரத்தின் போது கமல்ஹாசன் உறுதிபட கூறினார்.

மதுரை, 

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சு

அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.மோகன்ராஜூக்கு ஆதரவாக அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 12-ந்தேதி பள்ளப்பட்டி என்ற இடத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே. அங்குதான் தீவிரவாதம் தொடங்குகிறது. காந்திஜியின் படுகொலைக்கு பதில் பெறத்தான் இங்கு வந்துள்ளேன்” என கூறினார்.

அவர் இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவரது பிரசாரம் 2 நாட்கள் ரத்துசெய்யப்பட்டது.

கண்டனம்

கமல்ஹாசனின் கருத்துக்கு பாரதீய ஜனதா, அ.தி.மு.க. கட்சிகளும் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

நாகர்கோவில் வடசேரியில் கமல்ஹாசனின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடைபெற்றது. அது மட்டுமின்றி அரவக்குறிச்சி உள்பட பல்வேறு இடங்களில் கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சு குறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவரது கட்சியின் பதிவை ரத்துசெய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் முறையிடப்பட்டு இருக்கிறது.

கமல்ஹாசனின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக இந்து அமைப்புகள் அறிவித்ததை தொடர்ந்து சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மதுரையில் பிரசாரம்

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து கமல் ஹாசன் நேற்று மதுரை தோப்பூரில் பிரசாரம் செய்தார். அப்போது அரவக்குறிச்சி தொகுதி பிரசாரத்தின் போது தான் பேசியது சரித்திர உண்மை என்று அவர் உறுதிபட கூறினார்.

அவர் பேசுகையில் கூறியதாவது:-

தற்போது எங்கு போனாலும் மக்களுக்கு குடிப்பதற்கும், குளிப்பதற்கும் தண்ணீர் கிடைப்பது இல்லை. மின் விளக்கு வசதி இல்லை. மயானத்துக்கு மின் விளக்கு வசதி இல்லை. ஏன் என்று கேட்டால் செத்து போனவங்களுக்கு எதுக்கு மின் விளக்கு? என்று கேட்பார்கள். புதைக்க கொண்டு செல்லும் உறவினர்களுக்கு மின் விளக்கு வேண்டுமே. தற்போது குடிக்கும் நீரில் சாக்கடை கலந்து கொண்டிருக்கிறது. இது தேச துரோகம். அதை செய்து கொண்டிருக்கிறது ஒரு அரசு.

அவமானப்படுத்துகிறார்கள்

இதையெல்லாம் மாற்றி அமைக்க வேண்டியது நம் கடமை. இதற்காகத்தான் நான் ஊர், ஊராக சென்று கொண்டிருக்கிறேன். எனக்கு பல இடங்களில் பெருமை கிடைக்கிறது. சில இடங்களில் அவமானப்படுத்துகிறார்கள். அதையெல்லாம் நான் நினைத்ததே இல்லை.

காரணம், மக்கள் நீதி மய்யம் என்று பெயர் வைத்த எங்கள் கட்சிக்கு மக்கள் தான் முக்கியம். நீங்களே எனது சினிமாவில் பார்த்திருப்பீர்கள். சாதி பெயர் வைத்து படம் எடுத்தோம். ஆனால் அந்த படம், கூடி வாழ்ந்தால்தான் நன்மை உண்டு என்ற கருத்தைத்தான் சொல்கிறது. இதனை ஒவ்வொரு படத்திலும் கூறி வருகிறேன். அரசியலுக்கு வருவதற்கு முன்பே அநீதி எங்கு நடந்தாலும், என் நிலை என்னவாக இருந்தாலும், தைரியமாக குரல் கொடுக்கும் கலைஞர்களில் நானும் ஒருவன். அதை ஒவ்வொரு மதத்தினரும் சொல்வார்கள். எங்கெங்கு அநீதி நடக்கிறதோ நான் அங்கு குரல் கொடுப்பேன்.

சரித்திர உண்மை

நான் அரவக்குறிச்சியில் பேசியது குறித்து கோபப்படுகிறார்கள். நான் சொன்னது சரித்திர உண்மை. நான் யாரையும் சண்டைக்கு இழுக்க வில்லை. எனது பேச்சை முழுவதுமாக கேட்காமல் அதன் ஒரு பகுதியை கத்தரித்து ஊடகங்கள் வெளியிட்டன.

‘விருமாண்டி’ படத்தில் ஒரு வசனம் வரும். எதிரி ஒரு தடவைதான் சொன்னான், இவர்கள் போஸ்டர் போட்டு ஒட்டி விடுவாங்களோ? என்று. அந்த மாதிரி நான் ஒரு தடவைதான் சொன்னேன். ஊடகங்கள் பல முறை ஒளி பரப்பி விடுகின்றன.

பேச்சில் வாலையும், தலையையும் வெட்டி விட்டால் யாரை வேண்டுமானாலும் திட்டுவதாக மாற்றி விடலாம். 200 முறை ஒளிபரப்பினார்கள்.

எனக்கு ஏதோ ஐ.பி.சி. சட்டப்பிரிவை சொல்றாங்க போலும். நான் வக்கீலுக்கு பிள்ளை. வக்கீல் கிடையாது. என் மீது குற்றம் சாட்டுகிறீர்கள். அதை நம்புகிற மாதிரி சொல்ல வேண்டாமா? இந்த அரசியல் களத்தில் இறங்கிய பிறகு எனக்கு ஒரு இனம் மட்டும் போதுமா? மக்கள் நீதி என்ற பெயர் அடிபட்டு போய் விடுமே. பெரும்பான்மையை நோக்கி சென்று விட்டால் சரியா? மக்கள் எல்லோருக்கும் நீதி கிடைக்க வேண்டும். என்ன மதமாக இருந்தாலும், என்ன சாதியாக இருந்தாலும் சரி.

சகிப்புத்தன்மை

நான் யாரையும் புண்படுத்தும் மாதிரி பேச மாட்டேன். சரித்திர உண்மையை சொன்னால் புண் ஆகி விடும் என்றால் அந்த புண் ஆறாது. ஆற்றப்பட வேண்டும். நாம் கூடித்தான் வாழ வேண்டும். உங்கள் நண்பரை நீங்கள் ஏற்பீர்களா, சகிப்பீர்களா? என்னை கேட்டால் சகிப்புத்தன்மைதான் வேண்டும். மத நல்லிணக்கம் வேண்டும்.

சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்கள் என் மக்கள். அவர்கள் கும்பிடும் சாமி எது என்று கேட்க மாட்டேன். கும்பிடும் உருவம் அந்த மக்கள். அவர்களை சாமியாக பார்க்கிறேன்.

ஓட்டுக்காக மட்டும் நான் கும்பிடவில்லை. எங்கு போனாலும் என்னை தலைவனாக நான் பார்த்ததில்லை. உண்மையே வெல்லும். அதில் ஒன்று தான் நான் சொன்ன சரித்திர உண்மை.

திருந்த வேண்டும்

தீவிரவாதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிந்து கொள்ளுங்கள். நான் நினைத்தால் வேறு மாதிரி சொல்லி இருக்கலாம். கொலைகாரன் என்று சொல்லி இருக்கலாம். என்னுடைய தீவிர ரசிகர்கள் இங்கு இருக்கிறார்கள். நானும் தீவிர அரசியலில் இறங்கி இருக்கிறேன். தீவிரமாகத்தான் பேசுவோம். அதில் வன்முறை இல்லை. தீவிரம் தெரியும். நான் பேசுவது நிஜம்.

என் மொழி பேசுபவன் தமிழன். சாதி, மதத்தை வைத்து பிரிக்காதீர்கள். பிரித்து, பிரித்து நாங்கள் பட்டதெல்லாம் போதும். நான் படமும் எடுத்து பார்த்து விட்டேன். நீங்கள் திருந்த வேண்டும். என்னை அவமானப்படுத்த, எனது கொள்கையை கையில் எடுக்காதீர்கள். தோற்றுப்போவீர்கள். காரணம் என் கொள்கைக்கு நேர்மைதான் அடித்தளம். அது ஆள்கின்றவர்களுக்கு கிடையாது. பொய் சொல்வதை ஒரு அடித்தளமாக அமைத்துக்கொண்டு நீங்கள் அந்த மனப்போக்கில் உள்ளனர்.

வீழ்த்துவோம்

சென்னையில் இருந்து வரும் குரலும், டெல்லியில் இருந்து வரும் குரலும் பொய் சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது. இந்த அரசு வீழும். வீழ்த்தப்பட வேண்டும். வீழ்த்துவோம். இதில் வீழ்த்துவோம் என்பதை வன்முறையாக பேசிவிட்டதாக நினைத்து விடக் கூடாது. ஜனநாயகப்படி வீழ்த்துவோம். ஒரு காயமும் படாது. வெள்ளை வேட்டியில் அழுக்கு படாமல் நீங்கள் வீட்டுக்கு போய் விடலாம்.

அதற்கான ஏற்பாட்டை தாய்மார்கள், இளைஞர்கள் செய்யத் தொடங்கி விட்டார்கள். உங்களுக்கு என்ன? ஏதோ ஒன்றிரண்டு நாள் எனது பிரசாரத்தை தடுக்க வேண்டும். நிறுத்திவிடுங்கள். ஆனால் என் தம்பிகள் பேசுவார்கள். சகோதரிகள் பேசுவார்கள். அதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.

இங்கு பத்திரிகையாளர்கள் வந்திருக்கிறீர்கள். இந்த முறை எனது பேச்சை முழுவதுமாக போடுங்கள். இங்கே மக்களை நான் சந்திக்கும் சந்தோஷம் தொடரும். இதனை தடுக்க முற்படும் சக்திகள் தோற்றுப் போகும். ஜனநாயக ரீதியாக தோற்கடிக்கப்படுவார்கள்.

கசப்பு உதவும்

இந்த ஒற்றுமை நம் குணாதிசயமாக வேண்டும். இதுதான் எனது ஆசை. எந்த ஊரிலும், யாரை பற்றியும் சந்தோஷமாக பேசுவேன், விமர்சிப்பேன். இது என் மக்கள். அந்த உரிமையுடன் சொல்கிறேன்.

புரியாதவர்கள் ‘ஹேராம்’ படத்தை பாருங்கள். அதில் சொன்னதைத்தான் தற்போதும் சொல்கிறேன். உண்மை கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும். கசப்பும் மருந்தாகும். வியாதி போவதற்கு கசப்பு உதவக்கூடும்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

Next Story