மாநில செய்திகள்

இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது: தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால்அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை + "||" + Where needed Being successful ADMK Regime No danger

இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது: தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால்அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை

இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது: தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால்அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை
தமிழகத்தில் இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது. தேவையான இடங்களை கைப்பற்றியதால் அ.தி.மு.க. அரசு ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது.
சென்னை,

தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. 134 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. ஜெயலலிதா மீண்டும் முதல்- அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். எதிர்த்து நின்ற தி.மு.க. கூட்டணி 98 இடங்களை பிடித்தது.


இந்த நிலையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு கட்சி இரண்டாக உடைந்தது. டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

18 சட்டமன்ற தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திருவாரூர் எம்.எல்.ஏ. கருணாநிதி, சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் ஆகியோர் மரணமடைந்ததால், அந்த தொகுதிகளும் காலியான தொகுதிகள் பட்டியலில் இணைந்தது. இதற்கிடையே ஓசூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்த பாலகிருஷ்ண ரெட்டி, குற்ற வழக்கு ஒன்றில் சிக்கியதால் பதவியை இழந்தார். இதனால், தமிழகத்தில் காலியான தொகுதிகள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் இந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல் முடிவு மத்தியில் ஆட்சியை நிர்ணயிப்பதாக இருந்தாலும், 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவு தமிழகத்தில் ஆட்சியை நீடிக்க செய்யுமா? அல்லது கவிழ்க்குமா? என்ற நிலையில் இருந்தது. இதனால், தமிழக ஆட்சியாளர்கள் நாடாளுமன்ற தேர்தலைவிட, சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவையே பெரிதும் எதிர்பார்த்தனர்.

தமிழக சட்டமன்றத்தில் தற்போதைய நிலையில், அ.தி. மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 114 ஆக உள்ளது. தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் பலம் 97 ஆக உள்ளது. தற்போது, நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. வாக உள்ள எச்.வசந்தகுமார், நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால், அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார். அதனைத் தொடர்ந்து, நாங்குநேரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும்.

இதை வைத்து பார்க்கும்போது, மொத்தம் 233 சட்டமன்ற தொகுதிகளே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அப்படி இருக்கும்போது, 117 எம்.எல்.ஏ.க்கள் பலம் இருந்தால் அ.தி.மு.க. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 114 ஆக இருந்தாலும், 109 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவே இந்த கட்சிக்கு முழுமையாக உள்ளது. ரத்தினசபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகிய 3 பேர் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். அவர்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் ப.தனபாலும் நோட்டீசு அனுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் ஒரு பக்கம் இருந்தாலும், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களான கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை), தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி) ஆகியோர் அ.தி.மு.க. எதிர்ப்பு நிலைப்பாட்டில் உள்ளனர். எனவே, உண்மையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 109 ஆகவே இருக்கிறது. இதனால், இந்த இடைத்தேர்தலில் 22 இடங்களில் குறைந்தபட்சம் 8 இடங்களை கைப்பற்றினால் மட்டுமே அ.தி.மு.க. ஆட்சி தொடரும் என்ற நிலை ஏற்பட்டது.

இதனால், தமிழகத்தில் இடைத்தேர்தல் முடிவு பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலைப் போல் தொடக்கத்தில் இருந்தே இடைத்தேர்தலிலும் தி.மு.க. அதிக இடங்களில் முன்னிலை வகித்தாலும், இடைத்தேர்தல் வெற்றி என்பது அ.தி.மு.க.வுக்கு மதில்மேல் பூனையாகவே இருந்தது. ஓட்டு எண்ணும் நேரம் முழுவதும் ஆட்சியாளர்களுக்கு திக்.. திக்.. நிமிடங்களாகவே கழிந்தன.

இறுதியில் அ.தி.மு.க. 9 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. கட்சி நிர்வாகிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். சட்டசபையில் தற்போது அ.தி.மு.க.வின் பலம் பெரும்பான்மைக்கு தேவையான அளவுக்கு உள்ளது. 13 இடங்களை தி.மு.க. கைப்பற்றிய போதும் ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்த முடியவில்லை. என்றாலும், சட்டமன்றத்தில் 110 எம்.எல்.ஏ.க்களுடன் வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை