மாநில செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் : தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம் + "||" + Parliamentary poll: Voting percentage of political parties in Tamil Nadu

நாடாளுமன்ற தேர்தல் : தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்

நாடாளுமன்ற தேர்தல் : தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்
தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம் குறித்த புள்ளிவிவரங்கள் நேற்று வெளியாகின.
சென்னை,

தமிழகத்தில் வேலூர் தவிர 38 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்தது. தமிழகத்தின் அரசியல் தலைவர்களாகத் திகழ்ந்த, தி.மு.க.வின் தலைவர் கருணாநிதியும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் இல்லாத நிலையில் நடந்த முதல் தேர்தல் இதுவாகும்,

இந்தத் தேர்தலில் தேனி தவிர மற்ற அனைத்து தொகுதி களிலும் தி.மு.க. வெற்றி பெற்றது. தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் (விடுதலைச் சிறுத்தை கட்சி போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியைத் தவிர), அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளன.

சிதம்பரத்தில் தி.மு.க. கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, 3,219 ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க.வை வீழ்த்தியது. இது குறைந்தபட்ச வித்தியாசமாகும். அதிகபட்சமாக திண்டுக்கல் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சியான பா.ம.க.வை தி.மு.க. 5 லட்சத்து 38 ஆயிரத்து 972 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தத் தேர்தலில் தி.மு.க. அதிகபட்சமாக 7 லட்சத்தைத் தாண்டியும், குறைந்தபட்சமாக 4 லட்சத்துக்கு மேலாகவும் ஓட்டுகளைப் பெற்றுள்ளது. அந்த வகையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு 7 லட்சத்து 93 ஆயிரத்து 281 ஓட்டுகளைப் பெற்றுள்ளார். குறைந்தபட்சமாக தேனியில் 4 லட்சத்து 28 ஆயிரத்து 120 ஓட்டுகளை தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் பெற்றது.

ஆனால் அ.தி.மு.க. அதிகபட்சமாக 5 லட்சத்துக்கு மேலாகவும், குறைந்தபட்சமாக ஒரு லட்சத்துக்கு அதிகமாகவும்தான் ஓட்டுக்களைப் பெற்றுள்ளது. அந்த வகையில், தேனியில் அ.தி.மு.க. 5 லட்சத்து 4 ஆயிரத்து 813 ஓட்டுக்களையும், குறைந்தபட்சமாக திருச்சியில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 999 ஓட்டுக்களையுமே அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க. பெற்றிருக்கிறது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 5.98 கோடி ஓட்டுகளில் 4 கோடியே 23 லட்சத்து 66 ஆயிரத்து 721 ஓட்டுகள் செலுத்தப்பட்டு இருந்தன. அவற்றில் தி.மு.க. கூட்டணி, 2 கோடியே 23 லட்சத்து 3 ஆயிரத்து 310 ஓட்டுக்களைப் பெற்றுள்ளது. இதன் சதவீதம் 52.64 ஆகும்.

ஆனால் அ.தி.மு.க. கூட்டணி, ஒரு கோடியே 28 லட்சத்து 30 ஆயிரத்து 314 ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளது. இதன் சதவீதம் 30.28 ஆகும்.

தி.மு.க. மட்டும் 32.76 சதவீத ஓட்டுக்களைப் பெற்றுள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் 12.76 சதவீத ஓட்டுக்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2.40 சதவீதம், இந்திய கம்யூனிஸ்டு 2.43, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1.11 சதவீதம் ஓட்டுக்களைப் பெற்றுள்ளன. (விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒரு வேட்பாளர் மற்றும் ம.தி.மு.க. ஐ.ஜே.கே., கொங்கு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர்கள், தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். இந்தக் கட்சிகளுக்கான ஓட்டு சதவீதம் பிரித்துக் காட்டப்படவில்லை. ஆனாலும் 1.19 சதவீத ஓட்டுக்களை தி.மு.க. கூட்டணிக்கு இந்தக் கட்சிகள் அளித்ததாக கணக்கிடப்படுகிறது).

அ.தி.மு.க. மட்டும் 18.48 சதவீத ஓட்டுக்களைப் பெற்றுள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகளான பா.ஜ.க. 3.66 சதவீதம், தே.மு.தி.க. 2.19, பா.ம.க. 5.42 சதவீதம் ஓட்டுக்களைப் பெற்றுள்ளன. (புதிய தமிழகம், தமிழ்மாநில காங்கிரஸ் போன்ற சில கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டனர். இந்த கட்சிகளுக்கான ஓட்டு சதவீதம் பிரித்து காட்டப்படவில்லை. ஆனாலும் 0.53 சதவீத ஓட்டுக்களை இந்தக் கட்சிகள் பங்களித்ததாக கணக்கிடப்படுகிறது).

இந்தத் தேர்தலில் அ.ம.மு.க. கட்சியின் பலம் அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்டது. அ.தி.மு.க.வின் ஓட்டு சதவீதத்தை அதிக அளவில் அ.ம.மு.க. பெற்றிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. பெரிய கட்சிகளுக்கு இணையாக பேசப்பட்ட இந்தக் கட்சி, தமிழகம் முழுவதுமே 22 லட்சத்து 25 ஆயிரத்து 377 ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளது. இது 5.25 சதவீதமாகும்.

தேனியில் அதிகபட்சமாக அ.ம.மு.க. ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 50 ஓட்டுக்களைப் பெற்றுள்ளது. குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரியில் 8,867 ஓட்டுக்களை மட்டுமே அந்தக் கட்சி வாங்கியுள்ளது.

முதன் முறையாக தேர்தலில் குதித்து தமிழகம் முழுவதும் 15 லட்சத்து 75 ஆயிரத்து 620 ஓட்டுக்களை மக்கள் நீதி மய்யம் பெற்றிருக்கிறது. இதன் சதவீதம் 3.72 ஆகும்.

அதுபோல நாம் தமிழர் கட்சியும் ஒவ்வொரு தேர்தலிலும் விடாப்பிடியாக போட்டியிட்டு இந்தத் தேர்தலில் ஓட்டு சதவீதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி, 16 லட்சத்து 45 ஆயிரத்து 185 ஓட்டுக்களை, அதாவது 3.88 சதவீத ஓட்டுக்களை அந்தக் கட்சி பெற்றுள்ளது.

ஒவ்வொரு தேர்தலிலும் நோட்டாவுக்கு (யாருக்கும் வாக்களிக்கவில்லை) தனி இடம் கிடைப்பதுண்டு. இந்தத் தேர்தலில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 150 ஓட்டுக்களை நோட்டா பெற்றுள்ளது. இது 1.28 சதவீதமாகும். அதிகபட்சமாக ஸ்ரீபெரும்புதூரில் 23 ஆயிரத்து 343 ஓட்டுக்களும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 6,131 ஓட்டுக்களும் நோட்டாவுக்கு விழுந்தன.

இதன் ஓட்டு சதவீதத்தைப் பார்க்கும்போது நோட்டாவும் இன்னும் தேர்தல் களத்தை இழக்கவில்லை என்றே தெரிகிறது. இதன் மூலம் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர்கள், 1.28 சதவீதம் பேருக்கு பிடிக்கவில்லை என்றே கணிக்க முடிகிறது.