மருத்துவ மேற்படிப்பு நிபந்தனையை மாற்றியமைக்க அரசுடன் ஆலோசனை : ஐகோர்ட்டில், அட்வகேட் ஜெனரல் தகவல்


மருத்துவ மேற்படிப்பு நிபந்தனையை மாற்றியமைக்க அரசுடன் ஆலோசனை : ஐகோர்ட்டில், அட்வகேட் ஜெனரல் தகவல்
x
தினத்தந்தி 10 Jun 2019 11:29 PM GMT (Updated: 10 Jun 2019 11:29 PM GMT)

தமிழகத்தில் 2019-20-ம் கல்வியாண்டில், மருத்துவ மேற்படிப்புக்கான விளக்க குறிப்பேட்டை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் வெளியிட்டது.

சென்னை, 

மருத்துவ மேற்படிப்புக்கு ரூ.40 லட்சமும், மருத்துவ பட்டய மேற்படிப்புக்கும் ரூ.20 லட்சமும் பிணைத்தொகையாக செலுத்த வேண்டும். இரு அரசு உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவாத பத்திரம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்பது உள்பட கடுமையான நிபந்தனைகள் அதில் விதிக்கப்பட்டன.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் சரவணன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர், இந்த கடுமையான நிபந்தனைகளால் யாராவது தகுதி இருந்தும் மருத்துவ மேற்படிப்பில் சேர முடியாமல் உள்ளனரா? என்று அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியலை தாக்கல் செய்தார்.

பின்னர், ‘மருத்துவ மேற்படிப்புக்கு அரசு உயர் அதிகாரிகளிடம் உத்தரவாத பத்திரம் பெறும் நடைமுறை கேரளா, இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ளது. ஆனால், இந்த நிபந்தனையை மாற்றியமைப்பது தொடர்பாக தமிழக அரசுடன் கலந்து ஆலோசிக்கப்படும்’ என்று அட்வகேட் ஜெனரல் கூறினார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Next Story