வங்கிக்கடன் முறைகேடு: இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் உள்பட 17 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை - சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு


வங்கிக்கடன் முறைகேடு: இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் உள்பட 17 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை - சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 11 Jun 2019 11:51 PM GMT (Updated: 11 Jun 2019 11:51 PM GMT)

வங்கிக்கடன் முறைகேடு வழக்கில் இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்பட 17 பேருக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சென்னை, 

சென்னையில் உள்ள 7 தனியார் நிறுவனங்கள் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக அண்ணாசாலை, எழும்பூர், திருமங்கலம், கோடம்பாக்கம், ஆழ்வார்பேட்டை உள்பட 6 இந்தியன் வங்கி கிளை மூலம் கடந்த 1995-1996-ம் ஆண்டில் ரூ.30 கோடி வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நடந்து இருப்பது சி.பி.ஐ.க்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை முடிவில் முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்த சி.பி.ஐ. அதிகாரிகள், இந்த முறைகேட்டுக்கு அப்போதைய இந்தியன் வங்கி தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் வங்கி கிளை மேலாளர்கள் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன், 7 தனியார் நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள், இந்தியன் வங்கி கிளை மேலாளர்கள் என 27 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. விசாரணையின் போது 3 பேர் இறந்து விட்டனர்.

இதைத்தொடர்ந்து மற்றவர்கள் மீதான வழக்கு விசாரணை சென்னையில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி திருநீலபிரசாத் முன்னிலையில் நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

அதில், இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஏ.வி.சண்முகசுந்தரம், சோமயாஜி, சுப்பிரமணியன் உள்பட 17 பேர் இந்த வழக்கில் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், மொத்தம் 10 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


Next Story