ஐ.பி.எல். சூதாட்ட விவகாரம்: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டு ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு


ஐ.பி.எல். சூதாட்ட விவகாரம்: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டு ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Jun 2019 11:56 PM GMT (Updated: 11 Jun 2019 11:56 PM GMT)

சென்னையில் கடந்த 2013-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடந்தது.

சென்னை,

ஐ.பி.எல். போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கவுதம்சந்த் நிமானி, மகாவீர் சந்த், பாப்பு, உத்தம் சி.ஜெயின் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களை வழக்கில் இருந்து விடுவிக்க மகேந்திரசிங் ரங்கா, நேமிசந்த், ஹிராகுமார் உள்ளிட்டோர் ரூ.1.35 கோடி பெற்று மோசடி செய்ததாகவும், அதில் ரூ.60 லட்சத்தை அப்போது இந்த வழக்கை விசாரித்த ‘கியூ’ பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சம்பத்குமாரிடம் வழங்கியதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சம்பத்குமாருக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு சம்பத்குமார் மீது குற்றச்சாட்டுப்பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டை மத்திய நிர்வாக தீர்ப்பாயமும் கடந்த 2015-ல் உறுதி செய்தது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சம்பத்குமார் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் மீது தமிழக உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறாமல் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர். எனவே அந்த குற்றச்சாட்டுப்பதிவு ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மாநில உள்துறை அமைச்சகத்திடம் முறையாக அனுமதி பெற்று அவர் மீது உரிய நடவடிக்கை போலீசார் எடுக்கலாம்’ என்று உத்தரவிட்டனர்.

Next Story