மேட்டுப்பாளையம் அருகே அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது


மேட்டுப்பாளையம் அருகே அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது
x
தினத்தந்தி 13 Jun 2019 10:30 PM GMT (Updated: 13 Jun 2019 8:32 PM GMT)

மேட்டுப்பாளையம் அருகே அட்டகாசம் செய்து வந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை செல்லும் சாலையில் மோத்தேபாளையம் உள்ளது. இந்த கிராமம், கோவை வனக்கோட்டம் சிறுமுகை வனச்சரகம் சென்னாமலைக்கரடு என்னும் வனப்பகுதி அருகே உள்ளது.

சென்னாமலைக்கரடு வனப்பகுதியில் இருந்து கடந்த சில மாதங்களாக இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று குட்டிகளுடன் மோத்தேபாளையம் கிராமத்திற்குள் புகுந்தது. அது தோட்டங்களில் இருந்த கன்றுக்குட்டிகள் மற்றும் நாய்களை கடித்துக் குதறி கொன்றது.

கூண்டு வைத்தனர்

அட்டகாசம் செய்து வந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கிராமமக்கள் சிறுமுகை வனத்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதன் பேரில் சிறுமுகை வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய தானியங்கி கேமராவை பல்வேறு இடங்களில் வைத்து தீவிரமாக கண்காணித்தனர்.

கேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவானது. இதையடுத்து சிறுத்தை நடமாட்டம் இருந்த தோட்டத்தை யொட்டிய வனப்பகுதியில் வனத்துறையினர் நேற்று முன்தினம் மாலை இரும்பு கூண்டு வைத்தனர்.

சிக்கியது

இந்தநிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சென்று பார்த்த போது கூண்டுக்குள் சிறுத்தை உறுமும் சத்தம் கேட்டது. உடனே அவர்கள் கூண்டிற்குள் பார்த்த போது சிறுத்தை சிக்கி இருப்பதும், அது கூண்டுக்குள் ஆக்ரோஷமாக இருப்பதும் தெரிய வந்தது.

கூண்டில் சிக்கிய சிறுத்தை 2 வயது மதிக்கத்தக்கது என்றும், அது பெண் சிறுத்தை என்றும் வனத்துறையினர் கூறினர். கூண்டில் சிக்கிய சிறுத்தை லாரியில் ஏற்றி பவானிசாகர் அருகே உள்ள தெங்குமரஹாடா வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கூண்டின் கதவை வனத்துறையினர் திறந்து விட்டனர். உடனே அந்த சிறுத்தை கூண்டில் இருந்து சீறிப்பாய்ந்து வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது.

Next Story