சுகாதார வளாகத்திற்கான மானியம் வழங்க பயனாளிகளிடம் வசூல் செய்த ரூ.2 ஆயிரத்தை திருப்பி கொடுத்த அதிகாரிகள்


சுகாதார வளாகத்திற்கான மானியம் வழங்க பயனாளிகளிடம் வசூல் செய்த ரூ.2 ஆயிரத்தை திருப்பி கொடுத்த அதிகாரிகள்
x
தினத்தந்தி 13 Jun 2019 10:00 PM GMT (Updated: 13 Jun 2019 9:14 PM GMT)

திருப்பூர் அருகே தனிநபர் சுகாதார வளாகம் கட்டுவதற்கு மானியம் வழங்க வசூல் செய்த ரூ.2 ஆயிரத்தை அதிகாரிகள் திருப்பி கொடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்,

திருப்பூரின் அருகில் உள்ளது இச்சிபட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியில் இச்சிப்பட்டி, பட்டாம்பூச்சிபாளையம், தேவராயம்பாளையம், கொத்துப்பட்டிபாளையம், கொம்பக்காடு, சிங்கப்பூர்நகர், அம்மன் நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் 92 பேர் மத்திய அரசின் தனிநபர் இல்ல சுகாதார வளாகம் கட்டும் திட்டத்தில் ரூ.12 ஆயிரம் மானியத்தில் 2016-2017-ம் ஆண்டு சுகாதார வளாகம் கட்டினார்கள்.

சுகாதார வளாகம் கட்டும்போதே அப்போது இச்சிப்பட்டி ஊராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய சத்யா, சுகாதார வளாகம் கட்டும் 92 வீடுகளிலும் தலா ரூ.2 ஆயிரம் தனியாக வசூல் செய்தார். அந்த பணமானது புகைப்படம் எடுக்கவும், சுகாதார வளாகத்தில் பயனாளிகளின் பெயர்களை எழுதவும், வர்ணம் பூசுவதற்காகவும் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

திருப்பி கொடுத்தனர்

இதையடுத்து சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் அதற்காக மானியத்திற்காக விண்ணப்பித்து காத்து இருந்தனர். விண்ணப்பித்த ஒவ்வொருவரும் ஊராட்சி அலுவலகம், ஒன்றிய அலுவலகத்திற்கு நடையாய் நடந்து, மானியம் வந்து விட்டதா? என பலமுறை கேட்டு வந்துள்ளனர். அப்போது அதிகாரிகள் வந்து விடும், வந்து விடும் என்று கூறினார்களே தவிர கடைசிவரை வரவில்லை. இதனால் சலித்துப்போன பொதுமக்கள் நாங்கள் கொடுத்த பணத்தையாவது திருப்பிக்கொடுங்கள் என்று கேட்டு ஊராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள். அதன்பின்னர் அதிகாரிகள் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மானியம் விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும், ரூ.2 ஆயிரத்தை திருப்பி கொடுப்பதாகவும் உறுதி அளித்தனர்.

அதன்படி மத்திய அரசின் திட்டத்தில் தனிநபர் இல்ல சுகாதார வளாகத்திற்கு விண்ணப்பித்து ரூ.2 ஆயிரம் கொடுத்த அந்த பணத்தை அதிகாரிகள் திருப்பிக்கொடுத்தனர். யார் யார்? பணம் கொடுத்தனர் என்ற பட்டியலை கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக தேடிச்சென்று பணத்தை திருப்பி ஒப்படைத்த சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ஊரக வளர்ச்சி முதன்மை திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் கூறியதாவது:-

நடவடிக்கை

சுகாதார வளாகம் கட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் பணம் வாங்கவில்லை. துறையை சாராத நபர்கள் பணத்தை வாங்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் அரசு பணம் யாருக்கும் கொடுக்கப்படவில்லை. கடந்த 2 நாட்கள் இந்த பணத்தை வாங்கியவர்கள் பொதுமக்களிடம் திரும்ப கொடுத்து வருகிறார்கள். இதனால் பணத்தை கொடுக்கும் வரை காத்திருக்கிறோம். தற்போது உடனே நடவடிக்கை எடுத்தால் பொதுமக்களின் பணம் அவர்களுக்கு கிடைக்காமல் போய்விடும். தற்போது விசாரணை நடந்து வருகிறது.

விசாரணை முடிவில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். துறைரீதியானவர்கள் பணத்தை வாங்கியிருந்தால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். துறையை சாராதவர்கள் என்றால் பொதுமக்களை ஏமாற்றி பணம் வாங்கியதாக போலீசில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென தனி அதிகாரி நியமிக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. அவர்களது அறிக்கையின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Next Story