ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் 60 சதவீதம் நிறைவு -முதலமைச்சர் பழனிசாமி பேட்டி


ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் 60 சதவீதம் நிறைவு  -முதலமைச்சர் பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 18 Jun 2019 12:43 PM GMT (Updated: 18 Jun 2019 12:43 PM GMT)

ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் சுமார் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்று ஆய்வு செய்த பின் முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா  மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடல்  மெரினாவில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த நினைவிடத்தை தற்போது  நினைவு மண்டபமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்து இதற்காக அரசு  ரூ.50.80 கோடி ஒதுக்கியுள்ளது. தற்போது கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணியை முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார். முன்னதாக, ஜெயலலிதா நினைவிடம் சென்ற பழனிசாமி அங்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து, முதலமைச்சர் பழனிசாமி அங்கு நடைபெற்று வரும் நினைவிட  கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஜெயலலிதாவின் புகழுக்கு புகழ் சேர்க்கும் விதமாக நினைவு மண்டபம் அமைகிறது. இன்னும் 5 மாத காலத்தில் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் நிறைவுபெற்று, பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படும். சுமார் 60 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது.

இயற்கை பொய்த்துவிட்டது, பருவமழை போதிய அளவு பெய்யாததால் மிகுந்த வறட்சி ஏற்பட்டுள்ளது. எங்கெல்லாம் குடிநீர் பிரச்சினை இருக்கிறதோ அங்கெல்லாம் லாரிகள் மூலம் குடிநீர்  விநியோகம் செய்யப்படுகிறது.

தேவையான அளவு குடிநீர் வழங்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்கிறது.  ஒரு இடத்தில் இருக்கும் தண்ணீர் பிரச்சினையை தமிழகம் முழுவதும் இருப்பதுபோல் மாயை ஏற்படுத்த வேண்டாம். இன்னும் 3 மாத காலத்திற்கு நிலத்தடி நீரை எடுத்துதான் தர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்சினையை தீர்க்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர். எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story