61 உறுப்பினர்களை நீக்கிய விவகாரம்: நடிகர் சங்க தேர்தல் திடீர் நிறுத்தம் பதிவாளர் உத்தரவு


61 உறுப்பினர்களை நீக்கிய விவகாரம்: நடிகர் சங்க தேர்தல் திடீர் நிறுத்தம் பதிவாளர் உத்தரவு
x
தினத்தந்தி 19 Jun 2019 11:30 PM GMT (Updated: 19 Jun 2019 7:20 PM GMT)

61 உறுப்பினர்கள் நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடிகர் சங்க தேர்தலை திடீரென நிறுத்தி வைத்து தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, 

61 உறுப்பினர்கள் நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடிகர் சங்க தேர்தலை திடீரென நிறுத்தி வைத்து தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் சங்க தேர்தல்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் களமிறங்கின.

இதில் பாண்டவர் அணியில் பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணைத்தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் போட்டியிட்டனர். இதைப்போல சுவாமி சங்கரதாஸ் அணியில் பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், துணைத்தலைவர்கள் பதவிக்கு உதயா, குட்டி பத்மினி, பொருளாளர் பதவிக்கு பிரசாந்த் ஆகியோரும் களத்தில் இறங்கினர்.

61 பேர் நீக்கம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தை கைப்பற்றுவதற்காக இரு அணியினரும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அதேநேரம் இரு அணியினரும் ஒருவர் மீது ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அடுக்கி வந்தனர். இதனால் நடிகர் சங்க தேர்தல் மாநிலம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

முன்னதாக நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்த 61 பேர் பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரும் தென்சென்னை மாவட்ட பதிவாளரிடம் புகார் செய்தனர். கடந்த தேர்தலில் வாக்களித்த தங்களுக்கு தற்போது வாக்குரிமை வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

தேர்தல் ரத்து

இது தொடர்பாக விளக்கம் கேட்டு நடிகர் விஷாலுக்கு தென்சென்னை பதிவாளர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு விஷால் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இதை பரிசீலித்த பதிவாளர், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து நேற்று திடீர் உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-

விஷால் விளக்கம்

61 பேர் நீக்கம் தொடர்பாக தற்போதைய சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் அளித்த விளக்கத்தில், சங்கத்தின் மீது புகார் செய்தவர்களில் சுமார் 44 உறுப்பினர்கள் தொழில்முறை உறுப்பினர் பதவியில் இருந்து தொழில் முறை அல்லாத உறுப்பினர் பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், 4 உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் என்றும், 13 பேர் உறுப்பினர்களாக தொடருவதாகவும், அவர்கள் வரும் தேர்தலில் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் எனவும் கூறப்பட்டு உள்ளது.

மேலும் அவர்களின் அடையாள அட்டையை உறுதி செய்ய அவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை. இவர்கள் உண்மையிலேயே உள்ளனரா? இல்லையா? என்ற சந்தேகம் உள்ளது. எனவே இதுகுறித்து தாங்கள் (பதிவாளர்) அவர்களிடம் நேரில் விசாரணை செய்து உண்மை இருக்கும் பட்சத்தில் தங்களின் உத்தரவை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றும் பதிலளிக்கப்பட்டுள்ளது.

விசாரணை

எனவே மேற்படி நபர்கள் அனைவரையும் விசாரணைக்கு அழைத்து புகாரில் உண்மை உள்ளதா? என்பது குறித்து விசாரணை செய்து சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தலில் வாக்களிக்க தகுதி உள்ள உறுப்பினர்களின் பட்டியலை இறுதி செய்ய வேண்டி இருக்கிறது.

2019-22-ம் ஆண்டுக்கான சங்க நிர்வாகிகள் தேர்தல் அறிவிப்பில், ‘தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் தயார் செய்த உறுப்பினர்கள் பட்டியலில் உள்ள உறுப்பினர்கள் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்யலாம், போட்டியிடலாம், முன்மொழியலாம், வழிமொழியலாம், வாக்கு அளிக்கலாம்’ என வாசகம் உள்ளது.

உறுப்பினர் பட்டியல்

2017-18-ம் ஆண்டுக்கான உறுப்பினர் பட்டியலின் கோர்வை தென்சென்னை மாவட்ட பதிவாளரிடத்தில் பரிசீலனைக்காக நிலுவையாக உள்ள நிலையில் எந்த ஆண்டு உறுப்பினர் பட்டியலை அடிப்படையாக கொண்டு தேர்தல் நடைபெறுகிறது என்று ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது.

தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்துள்ளது. 2018 நவம்பரில் இருந்து 6 மாத காலத்துக்குள் தேர்தலை தள்ளிவைத்து கட்டிட பணி முடிவடைந்தவுடன், தேர்தல் நடத்த பொதுக்குழு ஒப்புதல் பெறப்பட்டு இருக்கிறது.

நிர்வாகிகள்

மேற்படி நீட்டிப்பு காலத்துக்குள் தேர்தல் நடத்தாமல் காலம் தாழ்ந்து தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே தற்போதைய சங்க நிர்வாகிகளின் பணிக்காலம் முடிந்த பிறகு அவர்களால் தேர்தல் தொடர்பாக எடுத்த முடிவின் நிலை குறித்தும் பரிசீலிக்க வேண்டி உள்ளது.

மேற்படி சூழ்நிலையில் சங்க தேர்தலை நடத்துவது ஏற்புடையதாக இல்லை. எனவே அனைத்து விவரங்கள் குறித்து தீர்வு காணும் வரை தேர்தல் குறித்த நடவடிக்கைகள் நிறுத்தி வைக்க ஆணையிடப்படுகிறது.

இவ்வாறு தென்சென்னை மாவட்ட பதிவாளரின் உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story