மாநில செய்திகள்

அனைத்து நடிகர்களும் விரும்பினால் நடிகர் சங்கத்தின் பெயரை ‘தமிழ் நடிகர் சங்கம்’ என்று மாற்றலாம் கமல்ஹாசன் பேட்டி + "||" + Name of the Actor Association Tamil Actors Association Interview with Kamal Haasan

அனைத்து நடிகர்களும் விரும்பினால் நடிகர் சங்கத்தின் பெயரை ‘தமிழ் நடிகர் சங்கம்’ என்று மாற்றலாம் கமல்ஹாசன் பேட்டி

அனைத்து நடிகர்களும் விரும்பினால் நடிகர் சங்கத்தின் பெயரை ‘தமிழ் நடிகர் சங்கம்’ என்று மாற்றலாம் கமல்ஹாசன் பேட்டி
அனைத்து நடிகர்களும் விரும்பினால் நடிகர் சங்கத்தின் பெயரை ‘தமிழ் நடிகர் சங்கம்’ என மாற்றலாம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
சென்னை,

நடிகர் சங்க தேர்தலில் ஓட்டு போட்டபின் நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:-

“நடிகர்கள் ஒரே குடும்பம். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை ‘தமிழ் நடிகர் சங்கம்’ என்று மாற்றும்படி அதிகமானோர் விரும்பினால் மாற்றலாம். தபால் ஓட்டுகள் சரியான நேரத்துக்கு சென்று சேரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த குளறுபடியால் ரஜினிகாந்தால் வாக்களிக்க முடியவில்லை.


ரஜினிகாந்த் உள்பட அனைத்து நடிகர்-நடிகைகளின் வாக்குகளும் முக்கியம். ரஜினிகாந்த் வாக்களிக்காதது வருத்தம். அடுத்த தேர்தலில் தபால் ஓட்டுகளில் இதுபோன்ற சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.” இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

நடிகர் விஜயகுமார் கூறியதாவது:- தேர்தலில் எந்த அணி வெற்றி பெற்றாலும் நலிந்த கலைஞர்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி தரவேண்டும். நடிகர் சங்க கட்டிடத்தையும் கட்டி முடிக்க வேண்டும். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றி ‘தமிழ்த்தாய் நடிகர் சங்கம்’ என்று பெயர்சூட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் நாசர் கூறியதாவது:- நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவதும், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவிகள் செய்வதும் பாண்டவர் அணிதான். எனவே தைரியமாக இந்த தேர்தலை எதிர்கொள்கிறோம். தேர்தல் 6 மாதம் தாமதமாக நடப்பதற்கான காரணத்தை சொல்லி விட்டோம். தபால் ஓட்டுகள் பதிவாவதில் சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளன.

சென்னையை தாண்டி இருக்கும் பலருக்கு தபால் ஓட்டுக்கான வாக்கு சீட்டுகள் சென்று சேரவில்லை என்ற புகார் உள்ளது. ரஜினிகாந்துக்கும் காலதாமதமாகவே வாக்கு சீட்டு கிடைத்துள்ளது. அதற்காக நான் வருத்தப்படுகிறேன். இதுபோல் நிறைய பேர் வாக்களிக்கவில்லை.

ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது. இது யாருக்கு சாதகமாகும், யாருக்கு பாதகமாகும் என்று தெரியவில்லை. நடிகர் சங்கத்தின் பெயரை ‘தமிழ் நடிகர் சங்கம்’ என்று மாற்ற வேண்டும் என்று பலர் சொல்கிறார்கள். அதை சட்ட ரீதியாகத்தான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் விஷால் கூறும்போது, “தேர்தல் நடத்த உத்தரவிட்ட நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். தேர்தலை நடத்த விடக்கூடாது என்று மிரட்டல் ஆடியோ வந்துள்ளது. அதையும் மீறி தேர்தல் நடக்கிறது. நீதியரசர் உத்தரவுக்கு ஏற்ப நாங்கள் செயல்படுவோம். தேர்தல் முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கையை நடத்தாதது வருத்தம். இருந்தாலும் கோர்ட்டு தீர்ப்புக்கு ஏற்ப நாங்கள் செயல்படுவோம்” என்றார்.

நடிகை குஷ்பு கூறும்போது, “உண்மை நேர்மை எந்த பக்கம் உள்ளதோ அந்த அணி ஜெயிக்கும். சிலருக்கு தேர்தல் எங்கு நடக்கிறது என்றே தெரியவில்லை. நடிகர் சங்க தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு எந்த தேர்தலிலும் நடக்கவில்லை. 80 சதவீதத்துக்கும் அதிகமாக பதிவாகும் என்று நினைக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலிலேயே 55 சதவீதம்தான் ஓட்டுப்பதிவானது. நாட்டை மாற்றுவதற்கு ஓட்டுப்போட சொன்னால் 55 சதவீதம்பேர்தான் வெளியே வருகிறார்கள்” என்றார்.

நடிகை கே.ஆர்.விஜயா கூறும்போது, “தேர்தலில் போட்டியிடும் அனைவரும் கஷ்டப்பட்டு உள்ளனர். எந்த அணி பதவிக்கு வந்தாலும் நடிகர்களுக்கும், சினிமா துறைக்கும் நல்லது செய்ய வேண்டும். எல்லோருடைய வாழ்க்கைக்கும் நடிகர் சங்கம் துணையாக இருக்க வேண்டும். யார் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்” என்றார்.

நடிகை லதா கூறியதாவது:- “நடிகர் சங்க தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்று இரண்டு மூன்று நாட்களாக தவித்தோம். பல பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த தேர்தல் வெற்றிகரமாக நடப்பது மகிழ்ச்சி. பாண்டவர் அணிக்கு எனது ஆதரவு. சுவாமி சங்கரதாஸ் அணிக்கு எனது வாழ்த்துகள். நடிகர் சங்கத்துக்கான கட்டிடத்தை கட்டி முடிக்க வேண்டும். அதில் எல்லோருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும்.

நடிகர் சங்கம் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒரே குடும்பம். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் காலத்தில் இருந்து நான் இந்த சங்கத்தில் இருக்கிறேன். கட்சிக்கு அப்பாற்பட்டுத்தான் சங்கம் செயல்பட்டது. பாண்டவர் அணி ஜெயித்தால் நலிந்த நாடக நடிகர்களுக்கு நல்லது நடக்கும்.” இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் பார்த்திபன் கூறும்போது, “தேர்தல் ரத்து என்றதால் நானும், உதவியாளரும் மும்பை செல்ல விமானத்தில் டிக்கெட் எடுத்து இருந்தோம். அதன்பிறகு தேர்தல் ரத்து இல்லை என்றார்கள். இதனால் என்னால் மும்பை செல்ல இயலவில்லை. இந்த காரணத்தால் எனக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டது. என்னைப்போல் எல்லோராலும் பணத்தை விட்டுக்கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. தேர்தலை திடீரென்று வைத்தது நெருக்கடியான விஷயம்” என்றார்.

ஐசரி கணேஷ் கூறும்போது, “சுவாமி சங்கரதாஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேர்தல் ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளன. இரவுதான் தேர்தல் நடக்கும் இடத்தை சொல்லி உள்ளார்கள். இது அனைவருக்கும் எப்படி போய்ச் சேர்ந்து இருக்கும் என்று தெரியவில்லை. பெரும்பாலானோரின் ஆதரவு எங்களுக்குத்தான் உள்ளது” என்றார்.

நடிகர் விவேக் கூறும்போது, “நடிகர் சங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுக்கின்றனர். அது நல்ல விஷயம். கலைஞன் எல்லா மொழிக்கும், எல்லா மக்களுக்கும் சொந்தமானவன். நடிகர் சங்கத்துக்கு ‘தமிழ்த்தாய் நடிகர் சங்கம்’ என்று பெயர்வைத்தால் கூட எனக்கு மகிழ்ச்சிதான்” என்றார்.

நடிகர் ஆர்யா கூறும்போது, “இந்த தேர்தல் நடந்து இருக்கக்கூடாது என்ற உணர்வுதான் எனக்கு இருக்கிறது. பாண்டவர் அணியானாலும், பாக்யராஜ் அணியானாலும் அனைவருமே கடந்த தேர்தலில் சேர்ந்து ஒற்றுமையாக வேலை செய்தனர். அவர்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாததால் இப்போது தேர்தலில் வந்து நிற்கிறது. இந்த தேர்தலை நடத்தாமல் பார்த்திருக்கலாம். சுமுகமாக பேசி முடித்து இருக்கலாம்” என்றார்.

நடிகைகள் அம்பிகா-ராதா கூறும்போது, “அந்த அணி ஜெயிக்கணும், இந்த அணி ஜெயிக்கணும் என்பது இல்லை. நமது சினிமா அணியில் இருப்பவர்கள் வெற்றி பெற வேண்டும். சினிமா ஜெயிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். சினிமாவில் உள்ள எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுபோடும் போது எவ்வளவு ஆர்வம் இருந்ததோ அதே ஆர்வத்தோடு ஓட்டுபோட்டு இருக்கிறோம். யார் ஜெயித்தாலும் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள்” என்றார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை