காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்


காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
x
தினத்தந்தி 25 Jun 2019 12:15 AM GMT (Updated: 24 Jun 2019 10:46 PM GMT)

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகம் ஒப்புதல் கேட்டுள்ள நிலையில், அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி இருக்கிறார்.

சென்னை,

காவிரி ஆற்றின் குறுக்கே, தமிழக எல்லை அருகே உள்ள மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு கடந்த 2013-ம் ஆண்டு முடிவு செய்தது.

கர்நாடக அரசு கோரிக்கை

இதற்கான வரைவு திட்டத்தை தயாரித்த கர்நாடக அரசு, அதை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்து அணை கட்டுவதற்கான அனுமதியை கோரியது. இதற்கு அப்போதைய முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இத்திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டது.

இந்தநிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கையை கர்நாடக அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்து அணை கட்ட அனுமதி வழங்குமாறு கோரியது. அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து, விரிவான திட்ட அறிக்கை ஒன்றை தயாரித்து தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.

எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 15-ந் தேதி மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தினார்.

அதற்கு முன்னதாக கர்நாடக முதல்-மந்திரி குமார சாமி அமைச்சர் கஜேந்திர சிங்கை நேரில் சந்தித்து தமிழக அரசின் ஒப்புதலை பெறுவதற்கான அவசியம் இன்றி மேகதாது திட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும், மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று தமிழக அரசின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ரூ.9 ஆயிரம் கோடி

இந்தநிலையில், மேகதாது அணை கட்ட அனுமதி வழங்க கோரி கர்நாடக அரசின் காவிரி நீராவரி நிகாமா நியமிதா அமைப்பு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெங்களூரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையிலும், மேலும் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையிலும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை ஒன்றை கட்டுவதற்கு திட்ட மிடப்பட்டு உள்ளது. இதற் கான செலவு ரூ.9 ஆயிரம் கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

மேகதாதுவில் அணை கட்டுவதற்காக ஒட்டுமொத்தமாக 5,252 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இதில் 4,996 ஹெக்டேர் நிலம் மூழ்கும் பகுதியாகும். 256.40 ஹெக்டேர் கட்டுமான பணிக்காக தேவைப்படும்.

உறுதிப்படுத்தப்படும்

இந்த திட்டத்திற்காக தேவைப்படும் நிலத்தில் 3,181 ஹெக்டேர் காவிரி வனவிலங்குகள் சரணாலயத்திற்கும், 1,869 ஹெக்டேர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கும், 201 ஹெக்டேர் வருவாய் துறைக்கும் சொந்தமானது ஆகும். தமிழக எல்லையில் இருந்து 3.90 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த புதிய அணை அமைய இருக்கிறது.

இந்த அணை கட்டி முடிக்கப்படும் பட்சத்தில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலான 10 டி.எம்.சி. உள்பட தமிழகத்துக்கு மொத்தம் 177.25 டி.எம்.சி. தண்ணீரை முறைப்படி திறந்து விடுவது உறுதிப்படுத்தப்படும்

இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் அனுமதி தேவைப்படுகிறது. இந்த திட்டத்திற்கான விரிவான அறிக்கை, ஆவணங்கள் மற்றும் வரைபடங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. எனவே, இவற்றை பரிசீலித்து மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

பிரதமருக்கு கடிதம்

இந்தநிலையில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது என்று கோரி, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

மேகதாது அணைக்கட்டு மற்றும் குடிநீர் திட்டத்துக் கான சுற்றுச்சூழல் அனுமதிக் காக வரையறைகளை வெளியிடுவதற்கு கர்நாடக மாநிலத்தின் நீராவரி நிகாமா நியமிதா அமைப்பின் திட்டத்துக்கு அனுமதி மறுப்புக்காக நீங்கள் அவசரமாக தலையிடக்கோரி இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

மேகதாது அணை திட்டத்துக்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரும் கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை காவிரி நீர்தாவா நடுவர் மன்ற தீர்ப்புக்கும், 16.2.2018 அன்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கும் எதிரானது. கர்நாடக அரசின் இந்த திட்டத்தை தள்ளுபடி செய்ய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகத்துக்கு உத்தரவிடும் படி கேட்டுக்கொள்கிறேன்.

பெரும் பாதிப்பு ஏற்படும்

தமிழக அரசு தொடர்ந்து இந்த திட்டத்துக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை நிராகரித்து திருப்பி அனுப்ப வேண்டும். நடுவர் மன்ற தீர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு ஏற்ப, கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட நிர்ணயிக்கப்பட்ட அணை இது அல்ல என்பதால், மேகதாது அணை திட்டம் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு ஏற்ற வகையில் இல்லை.

மேலும், தமிழ்நாடு மற்றும் மற்ற காவிரி வடிகால் மாநிலங்களின் முன் ஒப்புதலை கர்நாடகம் பெறவில்லை. காவிரி ஒரு பற்றாக்குறை வடிநிலை என்ற வகையில் மேல் பகுதியில் மேகதாது அல்லது வேறு எந்த திட்டத்தை நிறைவேற்றினாலும், கடைமடை மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு திருத்தி அமைத்த காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கேற்ப, உரிய பங்கு தண்ணீர் கிடைப்பதில் பெரும் பாதிப்பு ஏற்படும்.

நிராகரிக்க வேண்டும்

மேலும், இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு முன்பு நிலுவையில் இருக்கிறது. இதை கடந்த 15.6.2019 அன்று உங்களிடம் கொடுத்த மனுவிலேயே தெரிவித்து இருக்கிறேன். இத்தகைய சூழ்நிலையில், இந்த திட்டத்துக்கான வரைமுறையை வழங்குவதற்கான கோரிக்கையை மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகம் பரிசீலிக்க வேண்டாம் என்று உத்தரவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், மத்திய நீர்வள அமைச்சகம் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை எடுத்த எடுப்பிலேயே நிராகரித்து அனுப்பவும், தமிழக அரசு மற்றும் பிற காவிரி வடிகால் மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த அனுமதியும் வழங்கக்கூடாது என்றும், ஜல சக்தி அமைச்சகத்துக்கு உத்தரவிடும்படி கேட்டுக்கொள்கிறேன். இதுகுறித்து நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

இவ்வாறு அவர் தனது கடிதத்தில் கூறி உள்ளார்.

Next Story