சட்ட விரோத பேனர் வழக்கு; தமிழக அரசின் செயல்பாடுகள் நீதிமன்றத்தை சோர்வடைய செய்து உள்ளது- நீதிபதிகள் வேதனை


சட்ட விரோத பேனர் வழக்கு;  தமிழக அரசின் செயல்பாடுகள் நீதிமன்றத்தை சோர்வடைய செய்து உள்ளது- நீதிபதிகள்  வேதனை
x
தினத்தந்தி 25 Jun 2019 11:57 AM GMT (Updated: 25 Jun 2019 11:57 AM GMT)

சட்ட விரோத பேனர் வழக்கில் தமிழக அரசின் செயல்பாடுகள் நீதிமன்றத்தையே சோர்வடைய செய்து விட்டதாக சென்னை ஐகோர்ட் வேதனை தெரிவித்துள்ளது.

சென்னை

சட்டவிரோத பேனர்கள் விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தத் தவறிவிட்டதாகக் கூறி, டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். ஐகோர்ட்  நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் எம்.நிர்மல் குமார் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசு மீண்டும் ஒரு வாரம் கால அவகாசம் கோரியது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழக அரசு தொடர்ந்து கால அவகாசம் கோருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலை நீடித்தால் உள்துறை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தனர். சாதாரண மனிதர்கள் தவறு செய்தால் தண்டனை வாங்கி கொடுக்கும் அரசு, அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கால அவகாசம் கோருவது ஏன் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சட்ட விரோத பேனர் வழக்கில் தமிழக அரசின் தொடர் செயல்பாடுகள் நீதிமன்றத்தையே சோர்வடைய செய்து விட்டதாகவும் கண்டனம் தெரிவித்தனர். 

அரசின் செயல்பாடுகளால் மனுதாரரிடம் மன்னிப்பு கோரும் நிலையை நீதிமன்றத்திற்கு தமிழக அரசு ஏற்படுத்திவிட்டதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், அரசுக்கு கால அவகாசம் வழங்க முடியாது எனவும் கூறினர். அரசு தலைமை வழக்கறிஞர் நாளை நேரில் ஆஜராகி சட்டவிரோத பேனர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story