கோவில்களில் உள்ள சிற்பங்களை அடையாளப்படுத்த மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி


கோவில்களில் உள்ள சிற்பங்களை அடையாளப்படுத்த மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
x
தினத்தந்தி 25 Jun 2019 9:43 PM GMT (Updated: 25 Jun 2019 9:43 PM GMT)

கோவில்களில் உள்ள சிற்பங்களை அடையாளப்படுத்த மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

சென்னை,

தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் க.பாண்டியராஜன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவில் சிற்பங்களை ஆவணப்படுத்துவது மாநில அரசாங்கத்தின் பணி. அதற்கு நாங்கள் எல்லாவற்றிலும் உறுதுணையாக இருப்போம் என்று மத்திய மந்திரி சொல்லி இருக்கிறார்.

ஒரு சிற்பத்தை நவீன முறையில் அடையாளப்படுத்த ரூ.10 ஆயிரம் செலவு ஆகிறது. தேசிய திட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு நிறைய நிதி கொடுக்க வேண்டும். நம்மிடம் உள்ள 36 அருங்காட்சியகத்தில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் அரும்பொருட்கள் இருக்கின்றன. இதை அடையாளப்படுத்துவதற்கு நிறைய செலவு ஆகும்.

மொத்தம் 20 ஆயிரம் கோவில்களுக்கு மேல் தமிழகத்தில் இருக்கிறது. அறநிலையத்துறைக்கு கீழ் வராத கோவில்கள் 20 ஆயிரம் உள்ளது. ஆக 40 ஆயிரம் கோவில்களில் 4 கோடி சிற்பங்கள் இருக்கின்றன. இதை எல்லாம் அடையாளப்படுத்த மிகப்பெரிய நிதி தேவை. இதை மத்திய அரசாங்கம் செய்ய வேண்டும்.

தொல்லியல் துறையில் பல திட்டங்கள் கடன் எடுத்து செய்து இருக்கிறோம். இன்னும் இந்த துறைக்கு அதிகமாக செலவிட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. தொல்லியல், கலை பண்பாடு, அருங்காட்சியகத்துக்கு குறைந்தது 500 கோடி ரூபாய் மத்திய அரசு கொடுத்தால் தான் தேவையான அனைத்து பணிகளையும் செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story