கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது மேலிடத்து முடிவு - கே.எஸ்.அழகிரி பேட்டி


கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது மேலிடத்து முடிவு -  கே.எஸ்.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 29 Jun 2019 9:28 AM GMT (Updated: 29 Jun 2019 10:34 AM GMT)

கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது மேலிடத்து முடிவு என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என கராத்தே தியாகராஜன் கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை, கராத்தே தியாகராஜன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.  அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன்,

நான் பேசிய நாளில் மாவட்ட செயலாளர்கள் பலரும் கூட என் கருத்தையே கூறினர். ஆனால் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  என் மீது மட்டும் ஏன் இத்தனை அழுத்தம் கொடுக்கின்றனர். நான் பேசிய கூட்டத்திலேயே காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி இருந்தார். அப்போதே அவர் ஏன் என் பேச்சை கண்டிக்கவில்லை. 

என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு திமுக மீது பழிபோடுகிறார்கள். ஆனால் உண்மையில் கே.எஸ்.அழகிரிக்கு தெரிந்து தான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.  நான் என்றுமே ராகுல்காந்தியின் விசுவாசி. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது அவரின் ரத்தத்தை பார்த்தவன் நான். என்றுமே காங்கிரஸ்காரனாகவே இருப்பேன் எனத் தெரிவித்தார்.

இந்தநிலையில்,  காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி  செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது மேலிடத்து முடிவு, நான் யாருக்கும் எதிரானவன் கிடையாது. காங். ஆலோசனை கூட்டம் குறித்து மேலிடத்திலிருந்து விளக்கம் கேட்டார்கள், நான் விளக்கம் கொடுத்து அதன் அடிப்படையிலேயே கராத்தே தியாகராஜன் நீக்கப்பட்டார்.  கட்சி தலைமையின் முடிவுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் நடவடிக்கை இருக்கத்தான் செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story