7 வயது சிறுமி அடித்துக்கொலை மாடியில் இருந்து தவறி விழுந்ததாக நாடகமாடிய தாய்-தந்தை கைது


7 வயது சிறுமி அடித்துக்கொலை மாடியில் இருந்து தவறி விழுந்ததாக நாடகமாடிய தாய்-தந்தை கைது
x
தினத்தந்தி 9 July 2019 10:15 PM GMT (Updated: 9 July 2019 10:06 PM GMT)

7 வயது சிறுமி அடித்துக்கொலை செய்யப்பட்டாள். அவள் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடிய தாய்-தந்தை கைது செய்யப்பட்டனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் ராமலிங்கபுரம் பூந்தோட்ட தெருவை சேர்ந்தவர் கைலாஷ். இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அவருடைய மனைவி நீலாவதி. இவர்களுக்கு ஐஸ்வர்யா (வயது 13), சுகிர்தா (7) என்ற இரண்டு மகள்கள்.

மூத்த மகள் ஐஸ்வர்யா ஆழ்வார்குறிச்சியில் தங்கியிருந்து படித்து வருகிறாள். பெற்றோருடன் இருந்த சுகிர்தா, அப் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். கைலாசுக்கு குடிப் பழக்கம் இருந்தது. அவர் தினசரி மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு கைலாஷ் வழக்கம்போல் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்தார். இதை பார்த்த சிறுமி சுகிர்தா கதறி அழுதபடி சண்டையை நிறுத்துமாறு கூறினாள். ஆனாலும் சண்டையை நிறுத்தாத கைலாஷ், தனது மனைவியை ஓங்கி அடிக்க முயன்றபோது குறுக்கே வந்த மகள் மீது பலமாக அடி விழுந்தது. இதில் சிறுமி சுகிர்தா சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தாள்.

இது தெரியாமல் சிறுமி மயங்கி விட்டதாக கருதி, சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்களிடம், வீட்டின் மாடியில் இருந்து தங்களுடைய மகள் தவறி கீழே விழுந்து விட்டதாக கூறியுள்ளனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மகளின் உடலை பெற்றுக் கொண்டு வீட்டுக்கு சென்றனர். பின்னர் நேற்று காலை சிறுமியின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சந்தேகம் அடைந்த அம்பை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், இதுபற்றி விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் நேற்று காலை சிறுமியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பெற்ற மகளை தந்தையே அடித்துக் கொலை செய்ததும், மாடியில் இருந்து தவறி விழுந்ததாக நாடகமாடியதும் தெரியவந்தது. பின்னர் சிறுமியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, கைலாசை கைது செய்தனர். மேலும் இந்த கொலையை மறைக்க உடந்தையாக இருந்ததாக சிறுமியின் தாய் நீலாவதியும் கைது செய்யப்பட்டார்.

Next Story