சென்னை, நாகையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை தமிழகத்தில் பயங்கரவாத அமைப்பை உருவாக்க முயற்சியா? திடுக்கிடும் தகவல்கள்


சென்னை, நாகையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை தமிழகத்தில் பயங்கரவாத அமைப்பை உருவாக்க முயற்சியா? திடுக்கிடும் தகவல்கள்
x
தினத்தந்தி 14 July 2019 12:00 AM GMT (Updated: 13 July 2019 7:39 PM GMT)

சென்னை, நாகையில் 4 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

சென்னை, 

சென்னை, நாகையில் 4 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். தமிழகத்தில் பயங்கரவாத அமைப்பை உருவாக்க முயற்சி நடந்திருக்கும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இலங்கை சம்பவம்

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை அன்று ஐ.எஸ். ஆதரவு பயங்காரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 253 பேர் பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜக்ரான் ஆசிம் என்ற பயங்கரவாதியுடன், கேரளாவில் உள்ள ஒரு அமைப்பை சேர்ந்த 4 இளைஞர்கள் ‘வாட்ஸ்-அப்’ மூலம் தொடர்பில் இருந்தது என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. இலங்கையை போன்று இந்தியாவிலும் தாக்குதல் நடத்துவதற்கு வியூகங்கள் வகுக்கப்பட்ட அதிர்ச்சி தகவலும் வெளியானது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் இந்தியாவில் உள்ள ஐ.எஸ். ஆதரவாளர்கள் நடமாட்டத்தை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு மத்திய உளவுப்பிரிவு எச்சரிக்கை விடுத்தது. இதைத்தொடர்ந்து ‘பேன் இந்தியா ஆபரேஷன்’ என்ற பெயரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி வேட்டையில் இறங்கினர்.

பயங்கரவாத அமைப்பு

கேரளாவில் கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஐ.எஸ். ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த மே மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தமிழ்நாட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

கோவை, ராமநாதபுரம், சேலம், மதுரை, நெல்லை உள்பட 10 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பில் இருந்த கோவை மற்றும் தென்காசியை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் சென்னை மண்ணடி, லிங்கிசெட்டி தெருவில் உள்ள ‘வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த்’ என்ற அமைப்பின் தலைவர் சையத் புகாரி, நிர்வாகிகள் உஸ்மான், இஸ்மாயில் மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த அசன் அலி, ஹாரிஸ் முகமது ஆகியோர் தடை செய்யப்பட்ட ‘அன்சாருல்லா’ என்ற பயங்கரவாத இயக்கத்தின் பெயரில் தமிழ்நாட்டில் பயங்கரவாத அமைப்பை காலூன்ற செய்வதற்கான நடவடிக்கைகளில் மறைமுகமாக ஈடுபட்டு வந்த அதிர்ச்சி தகவல் மத்திய உளவுத்துறை மூலம் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு கிடைத்தது.

அதிரடி சோதனை

இதையடுத்து அந்த அலுவலகத்திலும் மற்றும் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்துவது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகளுடன் நேற்றுமுன்தினம் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் என்.ஐ.ஏ. போலீஸ் சூப்பிரண்டு ராகுல் தலைமையில் 10 பேர் அடங்கிய அதிகாரிகள் நேற்று காலை 6 மணியளவில் சென்னை மண்ணடியில் உள்ள ‘வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த்’ அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த அமைப்பின் தலைவர் சையத் முகமது புகாரியின் வீடு புரசைவாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ளது. அவருடைய வீட்டிலும் சோதனை நடந்தது.

அதே நேரத்தில் நாகையில் என்.ஐ.ஏ. துணை போலீஸ் சூப்பிரண்டு சாகுல் அமீது தலைமையிலான தனிப்படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நாகை சிக்கல் மெயின் ரோட்டில் உள்ள அசன் அலி மற்றும் மஞ்சக்கொல்லையில் உள்ள ஹாரிஸ் முகமது ஆகியோரின் வீடுகளில் இந்த சோதனை நடந்தது. சென்னை மற்றும் நாகையில் 4 இடங்களில் காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 4 மணியளவில் நிறைவடைந்தது.

9 செல்போன்கள் பறிமுதல்

இந்த சோதனை தொடர்பாக என்.ஐ.ஏ. வட்டாரங்கள் தெரிவித்த திடுக்கிடும் தகவல் வருமாறு:-

தடை செய்யப்பட்ட ‘அன்சாருல்லா’ என்ற பயங்கரவாத இயக்கத்தை தமிழகத்தில் உருவாக்க சதித்திட்டம் தீட்டி உள்நாட்டில் இருந்தும், இந்தியாவுக்கு வெளியே இருந்தும் இந்தியா மீது தாக்குதல் நடத்த சிலர் தங்களை தயார்படுத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் சென்னையை சேர்ந்த சையத் புகாரியின் அலுவலகம் மற்றும் வீட்டிலும், நாகையை சேர்ந்த ஹசன் அலி யூனுஸ் மரைக்காயர் மற்றும் ஹாரிஸ் முகமது ஆகியோர் வீடுகளிலும் ஒரே நேரத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

இந்தசோதனையில் 9 செல்போன்கள், 15 சிம் கார்டுகள், 7 மெமரி கார்டுகள், 3 லேப்-டாப்கள், 5 ஹார்டு டிஸ்க்குகள், 6 பென் டிரைவ்கள், 2 டேபிளட்கள், 3 டி.வி.டி.கள், பருவ இதழ்கள், பயங்கரவாதத்தை தூண்டும் வகையிலான பேனர்கள், நோட்டீசுகள், புத்தகங்கள் உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக நிதி திரட்டி வந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடக்கிறது. விசாரணை முடிவில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story