சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த பார்வையற்ற மாணவி சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வுக்கு தேர்ச்சி


சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த பார்வையற்ற மாணவி சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வுக்கு தேர்ச்சி
x
தினத்தந்தி 13 July 2019 10:30 PM GMT (Updated: 13 July 2019 8:05 PM GMT)

சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த மதுரையை சேர்ந்த பார்வையற்ற மாணவி சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.

சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரான சைதை துரைசாமியை தலைவராக கொண்டு செயல்படும் மனிதநேய அறக்கட்டளை சார்பில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு மத்திய-மாநில அரசின் போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த சிறந்த வல்லுனர்களை கொண்டு, தரமான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

வாரநாட்கள் மட்டுமின்றி, வார விடுமுறை நாட்களிலும் முழு நேர வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக சைதை துரைசாமியால் சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இவை போட்டி தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவர்கள் சிறந்த குணநலன்களை அரசு பதவிகளில் அமரும்போது கடைபிடிப்பதற்கு ஏதுவாக அமைகிறது.

பார்வையற்ற மாணவி

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 120 மாணவ-மாணவிகள் மனிதநேய அறக்கட்டளை நடத்தும் இலவச விடுதிகளில் சேர்க்கப்பட்டு, சிறந்த பயிற்சியும் அளிக்கப்பட்டது. குறிப்பாக மதுரையை சேர்ந்த எம்.பூரணசுந்தரி என்ற மாணவி தனது இரண்டு கண்களிலும் முழுமையாக பார்வை இல்லாவிட்டாலும், தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்புடன் பயின்று இந்த ஆண்டு நடந்த சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

சோர்வு என்பதை அறியாத பூரணசுந்தரி அடுத்து வர உள்ள முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்று குடிமை பணியில் உயர்ந்த நிலையில் அமர்ந்தே தீருவேன் என்ற முனைப்புடன் படித்து வருவது பாராட்டத்தக்கது. இவர் கடந்த 2016-17 மற்றும் 2017-18 ஆண்டுகளில் நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் கலந்துகொண்டு முதல்நிலை, முதன்மை தேர்வுகளில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வில் பங்கேற்றார். இந்தியாவிலேயே முதன்மை தேர்வில் 2 முறையும், முதல்நிலை தேர்வில் ஒரு முறையும் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற ஒரே மாணவி பூரணசுந்தரி என்பது குறிப்பிடத்தக்கது.

சைதை துரைசாமிக்கு நன்றி

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றது குறித்து பூரணசுந்தரி கூறியதாவது:-

மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து படிப்பதற்கு உதவியாக இருந்தது மனிதநேய அறக்கட்டளை தான். பாதுகாப்பு அம்சங்களுடன் படிப்பதற்கு வசதியாகவும், நல்ல சாப்பாடு வசதியும் உள்ள இடமாக மனிதநேய மையம் விளங்குகிறது. இதனால் என்னுடைய பெற்றோர் என்னை நம்பி அனுப்பிவைத்தார்கள்.

நாங்கள் முன்னோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் முதுகெலும்பாக மனிதநேய மையத்தின் தலைவர் சைதை துரைசாமிதான் இருக்கிறார். ஒரு முயற்சி நாங்கள் எடுத்து சறுக்கும்போதும், எங்கள் பின்னால் நின்றுகொண்டு அடுத்தடுத்து முடியும் என்று தட்டிக்கொடுத்து உத்வேகத்தை கொடுப்பதற்கு அவருக்கு (சைதை துரைசாமி) மிகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story