மாநில செய்திகள்

பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டினார்கள் சென்னை, நாகையில் நடந்த சோதனைகளை தொடர்ந்து டெல்லியில் 14 பேர் கைது + "||" + 14 people arrested in Delhi following raids in Chennai and Nagai

பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டினார்கள் சென்னை, நாகையில் நடந்த சோதனைகளை தொடர்ந்து டெல்லியில் 14 பேர் கைது

பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டினார்கள் சென்னை, நாகையில் நடந்த சோதனைகளை தொடர்ந்து டெல்லியில் 14 பேர் கைது
சென்னை, நாகையில் நடந்த சோதனைகளை தொடர்ந்து, பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக டெல்லியில் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, 

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தினார்கள்.

தாக்குதல் நடத்த திட்டம்

இந்த குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட ஜக்ரான் ஆசிம் என்ற பயங்கரவாதியுடன், கேரளாவில் உள்ள ஒரு அமைப்பைச் சேர்ந்த 4 இளைஞர்கள் வாட்ஸ்-அப் மூலம் தொடர்பில் இருந்தது என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அத்துடன் இலங்கையை போல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்துவதற்கு திட்டங்கள் தீட்டப்பட்ட தகவலும் வெளியானது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, ஐ.எஸ். ஆதரவாளர்கள் நடமாட்டத்தை கண்காணித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்ததால், என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை, ராமநாதபுரம், சேலம், மதுரை, நெல்லை உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடத்தினார்கள். அப்போது சமூக வலைத்தளங்கள் மூலம் ஐ.எஸ்.இயக்கத்துடன் தொடர்பில் இருந்த சிலர் கைது செய்யப்பட்டனர்.

நாகையில் 2 பேர் கைது

இந்தநிலையில் சென்னை, மண்ணடி மற்றும் நாகப்பட்டினத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அசன் அலி, ஹாரிஸ் முகமது ஆகியோர் தடைசெய்யப்பட்ட “அன்சாருல்லா” என்ற இயக்கத்தின் பெயரில் தமிழ்நாட்டில் பயங்கரவாத அமைப்பை காலூன்ற செய்யும் நடவடிக்கைகளில் மறைமுகமாக ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

நாகையில் நடத்தப்பட்ட சோதனையில் செல்போன்கள், சிம் கார்டுகள், மெமரி கார்டுகள், லேப்-டாப்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து தீவிர விசாரணைக்கு பின் அசன் அலி, ஹாரிஸ் முகமது ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

பின்னர் இருவரையும் சென்னை அழைத்து வந்து எழும்பூரில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி செந்தூர்பாண்டியன் வீட்டில் அவரது முன்னிலையில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தினார்கள். அசன் அலி, ஹாரிஸ் முகமது இருவரையும் வருகிற 25-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து இருவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

டெல்லியில் 14 பேர் கைது

அசன் அலி, ஹாரிஸ் முகமது ஆகியோரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தமிழகத்தைச் சேர்ந்த சிலர் ஐக்கிய அரபு குடியரசு நாட்டில் இருந்தபடி தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு நிதி திரட்டியதாகவும், இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரியவந்தது. விசா ரணையின் போது, தங்களைப் போல் 14 பேர் ஐக்கிய அரபு குடியரசு நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டு டெல்லியில் பதுங்கி இருப்பதாக அசன் அலி, ஹாரிஸ் முகமது ஆகியோர் கூறியதாகவும் தெரிகிறது.

இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் டெல்லி விரைந்தனர். டெல்லியில் பதுங்கியிருந்த 14 பேரை அவர்கள் கைது செய்தனர். கைதான அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

யார்-யார்?

அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1.முகமது ஷேக் மொய்தீன் (மதுரை)

2.அகமது அசாருதீன் (திருவாரூர்)

3.தவுபிக் அகமது (சென்னை)

4.முகமது அக்சர் (தேனி)

5.மொய்தீன் சீனி சாகுல் அமீது (கீழக்கரை)

6.முகமது இப்ராஹிம் (நாகப்பட்டிணம்)

7.மீரான் கனி (தேனி)

8.குலாம் நபி ஆசாத் (பெரம்பலூர்)

9.ரபி அகமது (ராமநாத புரம்)

10.முன்தாசீர் (ராமநாதபுரம்)

11.உமர் பாரூக் (தஞ்சை)

12.பாரூக் (வாலிநோக்கம்)

13.பைசல் செரீப் (ராமநாதபுரம்)

14.முகமது இப்ராஹிம் (திருநெல்வேலி)

சென்னை அழைத்து வந்தனர்

பின்னர் அவர்கள் 14 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் எல்லை பாதுகாப்பு படை விமானம் மூலம் நேற்று மதியம் சென்னை அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி விமானநிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 14 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் 14 பேரையும் கறுப்பு துணியால் முகத்தை மூடி, மாலை 3.30 மணி அளவில் பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர்களை நீதிபதி செந்தூர்பாண்டி முன்பு ஆஜர்படுத்தினார்கள். விசாரணை செய்த நீதிபதி 14 பேரையும் வருகிற 25-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

புழல் சிறையில் அடைப்பு

இதையடுத்து 14 பேரும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அடைக்கப்பட்டனர்.

14 பேர் கோர்ட்டு ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அவர்களுடைய உறவினர்கள் அங்கு வந்திருந்தனர். நீதிமன்ற விசாரணை முடிந்தவுடன், கைது செய்யப்பட்டவர்களை அவர்களது குடும்பத்தினர் பார்த்துச் விட்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நிதி திரட்டும் பணி

நாகையில் இரண்டு பேரை கைது செய்தபிறகு அன்சாருல்லா இயக்கத்தைச் சேர்ந்த 14 பேர் டெல்லியில் இருப்பதாக தெரிவித்தனர் அவர்களை கைது செய்து விசாரணை செய்தபோது ஐக்கிய அரபு குடியரசு நாட்டில் இருந்து கொண்டு அன்சாருல்லா அமைப்புக்கான வேலையை அவர்கள் செய்து வந்தது தெரியவந்தது. இவர்கள் அப்படி செயல்பட்டதை அறிந்த அந்த நாட்டு அதிகாரிகள் 14 பேரையும் தங்களது கட்டுப்பாட்டில் 6 மாதங்களாக வைத்து விசாரணை செய்து உள்ளனர். பின்னர் அவர்களை டெல்லிக்கு நாடு கடத்திவிட்டு, அதுகுறித்து தகவலை மத்திய அரசுக்கு தெரிவித்து இருக்கிறார்கள்.

கைதானவர்கள் அன்சாருல்லா அமைப்புக்கு நிதி திரட்டுவது, ஆட்களை சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வந்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களும் கைது செய்யப்படுவார்கள். தேவைப்பட்டால் கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படும். கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் ஜாமீன் மனு ஏதும் அளிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.