உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் அரசும், மாநில தேர்தல் ஆணையமும் அரசியல் சட்டத்தை மீறுகின்றன மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் அரசும், மாநில தேர்தல் ஆணையமும் அரசியல் சட்டத்தை மீறுகின்றன மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 July 2019 11:00 PM GMT (Updated: 15 July 2019 7:03 PM GMT)

உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் அரசும், மாநில தேர்தல் ஆணையமும் அரசியல் சட்டத்தை மீறுகின்றன என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை, 

இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சட்டத்தை மீறுகின்றன

உள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் 31-ந் தேதி வரை மேலும் காலஅவகாசம் வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் கேட்டிருப்பதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இதை மாநில தேர்தல் ஆணையம் என்றழைப்பதை விட, மாநில அவகாச ஆணையம் என்றே அழைக்கலாம் போலிருக்கிறது.

உள்ளாட்சி அமைப்பின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்றும், உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே தேர்தலை நடத்தி முடித்துவிட வேண்டும் என்றும் அரசியல் சட்டப்பிரிவு 243(இ) மிகத்தெளிவாக கூறுகிறது. ஆனால் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் ஒவ்வொரு காரணங்களாக கண்டுபிடித்து மாநில தேர்தல் ஆணையமும் சொல்கிறது, அ.தி.மு.க. அரசும் ஆமோதிக்கிறது என்றால் இரண்டும் கூட்டணி அமைத்து உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து அரசியல் சட்டத்தை மீறுகின்றன என்பது தெளிவாகிறது.

காலஅவகாசம்

மாநில தேர்தல் ஆணையமும், அ.தி.மு.க. அரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போல் செயல்பட்டு, பஞ்சாயத்து ராஜ் அமைப்பை சீர்குலைப்பதோடு அரசியல் சட்டத்தையும் அப்பட்டமாக மீறுகின்றன.

சுதந்திரமான அமைப்பு என உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இப்படி அரசின் அடிவருடியாக நின்று உள்ளாட்சித்துறை அமைச்சரும், முதல்-அமைச்சரும் கூறும் காரணங்களின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டில் காலஅவகாசம் கேட்பது தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத்தையே கிண்டலும், கேலியும் செய்யும் போக்கு என்பதில் சந்தேகமில்லை.

கவர்னர் விளக்கம் கேட்க வேண்டும்

எந்த நேரத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தினாலும் தோல்வி என்பது உறுதி என்பதால் அ.தி.மு.க. ஆட்சி இப்படி அலங்கோலமான காரணங்களைக் கூறி, உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைத்து கொண்டிருக்கிறது. 33 மாதங்களாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது ஒன்றே அரசியல் சட்டம் தமிழகத்தில் செயல்பாடாமல் இருப்பதற்கு போதிய காரணம் என்பதை மாநில தேர்தல் ஆணையமோ அல்லது முதல்-அமைச்சர் பழனிசாமியோ உணர்ந்ததாக தெரியவில்லை.

ஆகவே சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும், மீண்டும் காலஅவகாசம் கேட்கும் மாநில தேர்தல் ஆணையரிடம், தமிழக கவர்னர் உடனடியாக விளக்கம் கேட்க வேண்டும் என்றும், அரசியல் சட்டப்பிரிவின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உரிய கட்டளையை பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story