அத்திவரதர் தரிசனம் : ரூ.300 கட்டணத்தில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை தரிசன திட்டம்


அத்திவரதர் தரிசனம் : ரூ.300 கட்டணத்தில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை தரிசன திட்டம்
x
தினத்தந்தி 20 July 2019 10:48 AM GMT (Updated: 20 July 2019 10:48 AM GMT)

காஞ்சீபுரத்தில் தரிசனம் செய்ய ரூ.300 கட்டணத்தில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை தரிசன திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

காஞ்சீபுரம்

20வது நாளான இன்று, அத்திவரதருக்கு இளஞ்சிவப்பு நிற பட்டாடையுடன், பச்சை நிறத்தில் அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டு செண்பக பூக்களுடன், நீண்ட மாலை அணிவிக்கப்பட்டு சுவாமியின் திருமார்பு முழுவதும் மல்லிகை மற்றும் கனகாம்பரம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  சுவாமியின் இடது கையில் சங்கும், வலது கையில் திருச்சக்கரமும் ஏந்தியவாறு பக்தர்களுக்கு மிக அழகாக காட்சி அளித்து வருகிறார்.

இதற்கிடையே அத்திவரதரை, தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். இன்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தரிசனம் செய்ய சென்ற பக்தர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்த நிலையில் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து ரங்கசாமி குளம் வரை ஏராளமான பக்தர்கள் சாலையில் நடந்து செல்வதால் பஸ்கள் மற்றும் ஸ்மால் பஸ்களை இயக்க முடியவில்லை. இதையடுத்து ஒலிமுகமது பேட்டை, ஓரிக்கையில் இருந்து ரங்கசாமி குளம் வரையிலும், பெரியார் நகரில் இருந்து சுங்கச்சாவடி வரையிலும் மட்டுமே ஸ்மால் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் சுமார் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று தரிசனம் செய்கிறார்கள்.

பொது தரிசன வரிசையில் கிழக்கு கோபுரத்தில் இருந்து வசந்த மண்டபம் வரை வரிசையில் வந்து அத்திவரதரை தரிசிக்க அதிகபட்சமாக 6 மணி நேரம் ஆகிறது. குறைந்தபட்சமாக 3½ மணி நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள்.

அனுமதி சீட்டு இல்லாதவர்களை கண்டிப்பாக வி.ஐ.பி. தரிசன வரிசையில் அனுமதிக்கக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து முக்கிய பிரமுகர்களுக்கான தரிசன வரிசை தற்போது சீராகியுள்ளது. வி.ஐ.பி. தரிசன வரிசையில் செல்பவர்கள் 3 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்கிறார்கள்.

வி.ஐ.பி. பக்தர்கள் வருகை அதிகரிப்பால் சாதாரண பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிவதில்லை. இதன் காரணமாக வி.ஐ.பி. பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி வி.ஐ.பி. பக்தர்கள் மாலை 6 மணி வரையே அத்திவரதரை தரிசிக்க முடியும். மாலை 6 மணிக்கு மேல் வி.ஐ.பி. பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணி முதல் இந்த தடை அமலுக்கு வந்துள்ளது.

அதற்கு பதிலாக ரூ.300 கட்டணத்தில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை தரிசன திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரூ.300 கட்டணத்தில் வி.ஐ.பி.க்கள் செல்லும் வழியில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சென்று அதிவிரைவாக அத்திவரதரை தரிசனம் செய்யலாம். இந்த ரூ.300 டிக்கெட்டை இணைய தளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.

அத்திவரதர் தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் நெரிசலில் சிக்கி இறந்ததால் அத்திவரதரை தரிசிக்க முதியவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா அறிவித்துள்ளார். நெரிசல் காரணமாக உடல் தளர்ந்த முதியோர்கள் அத்திவரதரை தரிசிக்க வருவதை தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

கலெக்டரின் இந்த அறிவிப்பு வயதான பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

1979 ம் ஆண்டு போதுமான அளவில் அத்திவரதர் குறித்த செய்திகளை அறிய வெளியூர் பக்தர்களுக்கு வாய்ப்பில்லை. எனவே 90 சதவீத வெளியூர் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்திருக்க முடியாது. வயது முதிர்ந்தவர்களும் அத்திவரதரை தரிசித்திருக்க வாய்ப்பில்லை.

இந்நிலையில் மூத்த குடிமக்கள் என அழைக்கப்பட்டு பல்வேறு சலுகைகளை பெறும் முதியவர்களை சாமி தரிசிக்க வரக்கூடாது என மாவட்ட நிர்வாகம் சொல்வது அதிர்ச்சி அளிக்கக் கூடியது ஆகும். முதிய பக்தர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டிய மாவட்ட நிர்வாகம் இது போன்ற அறிவிப்பினை வெளியிட்டு இருப்பது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Next Story