அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.10 ஆயிரமாக உயர்வு


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.10 ஆயிரமாக உயர்வு
x
தினத்தந்தி 20 July 2019 10:30 PM GMT (Updated: 20 July 2019 9:31 PM GMT)

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று பொதுத்துறை, மாநிலச் சட்டமன்றம், கவர்னர் மற்றும் அமைச்சரவை, நிதித் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று உறுப்பினர்கள் பேசி முடித்ததும், அவர்களுக்கு பதில் அளித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடும் நிதி நெருக்கடி

செலவினங்களைப் பொறுத்தவரையில், சமீப காலமாக தமிழ்நாடு அரசு பல சவால்களைச் சந்தித்து வருகிறது. மத்திய அரசின் உதய் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தின் கடனான ரூ.22,815 கோடியை தமிழ்நாடு அரசு தனது கடனாக ஏற்றுக்கொண்டதன் விளைவாக, தமிழ்நாடு அரசின் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டிற்கு கூடுதலாக ரூ.6,342 கோடி வட்டித்தொகை கட்டுவதிலும் மானியம் வழங்குவதிலும் கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதுடன், மின்பகிர்மானக் கழகத்தின் நட்டத்தில் அதிகரிக்கப்பட்ட பங்கையும் ஏற்க வேண்டியுள்ளது.

இவ்வாறான கடும் நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும், தமிழ்நாடு அரசு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, அரசு ஆண்டுக்கு ரூ.14,719 கோடி அளவிற்கு கூடுதல் செலவினத்தை ஏற்றுள்ளது. இதோடு மட்டுமல்லாது, அடுத்தடுத்து ஏற்பட்ட ‘கஜா’ புயல் போன்ற இயற்கைப் பேரிடர்கள் நிகழ்ந்ததன் காரணமாக, துயர் துடைப்பு பணிகளுக்காக எதிர்பாராச் செலவினத்தையும் அரசு மேற்கொண்டுள்ளது.

நிதிநிலை மேலாண்மை

இவ்வாறான பல்வேறு சவால்களை சந்தித்து வந்தபோதிலும் மாநில அரசு திறம்படவும், சிறப்பாகவும் மக்கள் நலத் திட்டங்களை செம்மையாகச் செயல்படுத்தி வருவதுடன், தமிழ்நாடு நிதிநிலைமை பொறுப்புடைமைச் சட்டம், 2003-ன் விதிமுறைகளுக்கு உட்பட்டு, நிதிப் பற்றாக்குறையை மூன்று சதவீதத்திற்குள்ளாகவும் நிலுவைக் கடன்களை 25 சதவீதத்திற்குள்ளாகவும் பராமரித்து, இந்த அரசு நுட்பமாக நிதிநிலையை மேலாண்மை செய்து வருகிறது.

அரசுக்கு அச்சாணியாக திகழ்பவர்கள் அரசு ஊழியர்கள் ஆவார்கள், அவர்கள் நலனில் அக்கறை கொண்டது அ.தி.மு.க. அரசு. அந்த அடிப்படையில் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஆகியோர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும்.

துணைக்கோள் நகரம்

தற்போதுள்ள நடைமுறைகளுக்கு உட்பட்டு, ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகை முன்பணம், ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். சென்னை மாநகருக்கான வீட்டு வசதித் தேவையை பரவலாக்கி ஈடுசெய்திட சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள திருமழிசையில் 311.05 ஏக்கர் நிலப்பரப்பில் துணைக்கோள் நகர் அமைப்பதற்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார்.

திருமழிசை துணைக்கோள் நகரம் திட்டத்தை, பகுதி வாரியாக செயல்படுத்த உத்தேசித்து முதற் கட்டமாக, 122.99 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.245.70 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் முடிவுற்றுள்ளன.

பீட்டர்ஸ் காலனி குடியிருப்பு இடிப்பு

அரசு அலுவலர்களுக்கு சென்னை, அம்பத்தூர் அருகே அயப்பாக்கத்தில் ரூ.141.05 கோடி மதிப்பீட்டில், 408 குடியிருப்புகள் கட்டவும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும் இத்துறையின் கீழ் இயங்கிவரும் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சென்னை, பாடிகுப்பத்தில் 182 குடியிருப்புகள், ரூ.90 கோடி மதிப்பீட்டில் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னை, கே.கே.நகரில் சிற்றங்காடிகள் அமைந்திருந்த வணிக வளாகம் இடிக்கப்பட்டு, 216 குடியிருப்பு அலகுகள் மற்றும் வணிக, அலுவலக வளாகம் ரூ.227.26 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை, பீட்டர்ஸ் சாலையில் உள்ள பீட்டர்ஸ் காலனி குடியிருப்பில் வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான 3.84 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள கட்டிடங்களை இடித்துவிட்டு 8.15 லட்சம் சதுர அடியில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் மக்களின் தேவையினை கருத்தில் கொண்டும், வாரியத்திற்கு வருவாய் ஈட்டும் நோக்கிலும் வணிக வளாகம் மற்றும் அலுவலக வளாகம் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இங்கு தற்பொழுது குடியிருக்கும் அரசு ஊழியர்களுக்கு மாற்றுக் குடியிருப்பு வழங்க உரிய வழிவகை செய்யப்படும்.

திருஷ்டிப் கழிப்பு

2011 சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் 2014 நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல்கள், 2016 சட்டமன்ற பொதுத்தேர்தல் என இணையில்லா வெற்றி பெற்றோம்.

இப்படியாக, தொட்ட தெல்லாம் வெற்றி இயக்கத்துக்கு, தமிழகத்து மக்கள் திருஷ்டி கழிப்பு நடத்தியிருப்பதாகத்தான் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவை நாம் கருத வேண்டியிருக்கிறது. ஆனாலும் தேனி வெற்றி பெற்றிருக்கிறது.

தேனீ பல நாள் உழைத்து கட்டுகின்ற தேன்கூடு திருடப்படுகிறது அப்போது, தேனீ தேம்பி அழுவதில்லை, காரணம்,

தேனீயின் கூட்டை தான் திருடமுடியுமே தவிர, தேனீ கூடு கட்டும் திறமையை, உழைப்பை, யாராலும் அபகரிக்க முடியாது. அதனால்தான் தனது அயராத உழைப்பால் கட்டிய கூடு பறிபோன உடனேயே புதிய தேனடையை கட்டுவதற்கு புறப்பட்டு விடுகிறது தேனீ.

‘ஹாட்ரிக்’ சாதனை

இதனை இங்கு சொல்வதற்கு காரணம் நாங்கள் போட்டியிட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் மொத்தத்திலும் வெற்றி வாய்ப்பு இழந்திருந்தாலும் தேனி என்ற ஒற்றை தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆக தேனீ இனி என்ன செய்யும், தித்திப்பு குன்றாத புதிய தேனடையை கட்ட புறப்பட்டு விடும்.

அப்படி 1½ கோடி அ.தி.மு.க. சிப்பாய்கள் தேனீயாக உழைத்து 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஒரு ‘ஹாட்ரிக்’ சாதனையை ஆட்சியில் இருந்து கொண்டே, 3-வது முறையாக ஆட்சியை தொடர்கிற அதிசயத்தை, அரசியல் புரட்சியை அ.தி.மு.க. நடத்தி காட்ட இருக்கிறது என்பதற்கான முன்னறிவிப்பு செய்தியே ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story