அறநிலையத்துறை அமைச்சர், குருக்களுக்கு தெரியாமல் ‘கோவில்களில் சிலைகள் திருட்டு எப்படி நடக்கும்’ - சீமான்


அறநிலையத்துறை அமைச்சர், குருக்களுக்கு தெரியாமல் ‘கோவில்களில் சிலைகள் திருட்டு எப்படி நடக்கும்’  - சீமான்
x
தினத்தந்தி 25 July 2019 5:51 PM GMT (Updated: 25 July 2019 5:51 PM GMT)

தமிழகத்தில் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் குருக்களுக்கு தெரியாமல் கோவில்களில் சிலைகள் திருட்டு எப்படி நடக்கும்? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

திண்டுக்கல்

 தம்பி கலைக்கூடம் தயாரிப்பில் சுதா இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாகவும், அனுசித்ரா கதாநாயகியாக நடிக்கும் ‘அமிரா’ என்ற சினிமா படப்பிடிப்பு சின்னாளபட்டி அருகே நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் நடிகர் சீமான் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா கருத்து சரியான கருத்து. அதனை நான் ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்தாக பார்க்கிறேன். கல்வி மாநில அரசின் உரிமை. ஆனால் கல்வியை மத்திய பட்டியலுக்கு கொண்டு சென்ற பின், அனைத்து அதிகாரத்தையும் மத்திய அரசே எடுத்துக் கொண்டது. தற்போது இந்தி, சமஸ்கிருதம் படிக்க சொல்கின்றனர். இந்திய மொழிகளின் தொன்மையை தமிழ் மொழியில் இருந்து அறியலாம் என்று பிரதமரே கூறியுள்ளார். எனவே தொன்மையான தமிழை இந்திய ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். மருத்துவ படிப்புக்கு ‘நீட்’ தேர்வு நடத்துவதை தொடர்ந்து எதிர்க்கிறோம். இதற்கு தமிழக அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

கோவில்களில் சிலைகள் திருட்டு என்பது அறநிலையத்துறை அமைச்சர், கோவில் குருக்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு தெரியாமல் எப்படி நடக்கும்?. இது ரொம்ப வேடிக்கையாக உள்ளது. நாம் தமிழர் கட்சி ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக தான் ஆரம்பிக்கப்பட்டது. கட்சிகளோடு கூட்டணி வைத்தால் அந்த மாற்றத்தை கொண்டு வர முடியாது. அதனால் இந்திய கட்சிகள், திராவிட கட்சிகளோடு எப்போதும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க மாட்டோம். தனித்து தான் போட்டியிடுவோம்.

அ.தி.மு.க. அரசு என்பது தமிழகத்தில் இல்லை. இங்கு நடப்பது பாரதீய ஜனதா அரசு. பொதுபட்டியலில் உள்ளவர்களுக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீடு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பொருளாதாரத்தில் பின் தங்கியவராக இருந்தால் வங்கியில் கடன் கொடுத்து முன்னேற்றத்திற்கான வழியை செய்ய வேண்டுமே ஒழிய, அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது என்பது பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகத்தான் பார்க்கிறோம்.

இவ்வாறு சீமான் கூறினார்.

Next Story