முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை -தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாள் பேட்டி


முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை -தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாள் பேட்டி
x
தினத்தந்தி 26 July 2019 7:25 AM GMT (Updated: 26 July 2019 10:05 AM GMT)

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலைக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என திமுகவின் ஆதிதிராவிட நலக் குழு மாநில துணை செயலாளர் சீனியம்மாள் கூறினார்.

மதுரை,

நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் உமா மகேசுவரி (வயது 62). இவர் நெல்லை மாவட்ட தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். இவருடைய கணவர் முருகசங்கரன் (71). நெடுஞ்சாலைத்துறையில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்களுடைய வீடு நெல்லை மேலப்பாளையத்தில் இருந்து ரெட்டியார்பட்டி செல்லும் ரோட்டில் அமைந்துள்ளது.

கடந்த 23-ந்தேதி கணவன், மனைவி வீட்டில் இருந்தபோது ஒரு கும்பல் வீட்டுக்குள் புகுந்து அவர்களை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தனர். அப்போது வீட்டில் இருந்த மாரி என்ற பணிப்பெண்ணையும் இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றனர்.

இந்த கொலை தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. 50-க்கும் மேற்பட்டோரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரித்தனர்.

நெல்லையை சேர்ந்த தி.மு.க. பெண் பிரமுகர் ஒருவர் மதுரையில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு வந்திருந்ததை அறிந்து, அந்த வீட்டுக்கு அதிரடியாக சென்று விசாரணை நடத்தியது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னாள் மேயரான உமா மகேசுவரி கடந்த 2011-ம் ஆண்டு சங்கரன்கோவில் சட்டசபை தொகுதியில் (தனி) போட்டியிட்டார். அதன்பிறகு நடந்த இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. ஆனால் கட்சி தலைமைக்கு உமா மகேசுவரி மற்றும் முருகசங்கரன் ஆகியோர் மிகவும் நெருக்கமாக இருந்தனர். இதையொட்டி கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போதே அந்த தி.மு.க. பெண் பிரமுகரிடம், சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட சீட் வாங்கி தருவதாக கூறி உமா மகேசுவரி பணம் பெற்றார் என கூறப்படுகிறது. ஆனால் அந்த தேர்தலில் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. எனவே, நாடாளுமன்ற தேர்தலின் போது தென்காசி தொகுதியில் போட்டியிட சீட் வாங்கி தருவதாக கூறி அந்த பெண் பிரமுகரை சமரசம் செய்துவிட்டு, பணத்தை உமா மகேசுவரி வைத்துக்கொண்டார் எனவும் தகவல்கள் வெளியாகின.

இதில் ஆத்திரமடைந்த அந்த பெண் பிரமுகர் கூலிப்படையை ஏவி இந்த கொலைகளை அரங்கேற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இது உண்மையா? என போலீசாரிடம் உறுதிப்படுத்த முயன்றபோது, அவர்கள் அதுதொடர்பான தகவல் எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டனர். 3 பேர் கொலையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதால் நெல்லையில் மேலும் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் விசாரணை பற்றி திமுகவின் ஆதிதிராவிட நல குழு மாநில துணை செயலாளர் சீனியம்மாள்  கூறியதாவது:-

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை தொடர்பாக திருநெல்வேலி தனிப்படை காவல்துறையினர் விசாரணை செய்தனர். எனக்கு உடல்நலம் சரி இல்லாத காரணத்தால் கடந்த ஒரு ஆண்டாக மதுரையில் உள்ள எனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றேன்.

நான் மாநில நிர்வாகி, கொலையான உமா மகேஸ்வரி மாவட்ட நிர்வாகி. கட்சி பதவிக்காகவோ அல்லது தேர்தலில் சீட் வாங்கி தரவேண்டும் என்றோ நான் அவரிடம் பணம் கொடுத்து ஏமாறவில்லை. கொலையான உமா மகேஸ்வரி உண்மையிலேயே நல்லவர்.

உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர்  கொலை செய்யப்பட்டதை நான் டி.வி செய்தியை பார்த்து தான் தெரிந்துகொண்டேன். காவல்துறை சந்தேகத்தின் பேரில் 100 பேரிடம் விசாரித்தால் அவர்கள் அனைவரும் குற்றவாளி கிடையாது. 

என் மீது குற்றம்சாட்டி தி.மு.கவிற்கு அவப்பெயர் ஏற்படுத்த சிலர்  நினைக்கின்றனர். காவல்துறை உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று கூறினார்.

Next Story