குடும்ப தகராறில் லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை; காப்பாற்ற முயன்ற மனைவியும் சாவு திருமணமான 6 மாதத்தில் பரிதாபம்


குடும்ப தகராறில் லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை; காப்பாற்ற முயன்ற மனைவியும் சாவு திருமணமான 6 மாதத்தில் பரிதாபம்
x
தினத்தந்தி 27 July 2019 8:13 PM GMT (Updated: 2019-07-28T01:43:17+05:30)

குடும்ப தகராறில் லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற அவரது மனைவியும் பரிதாபமாக உயிரிழந்தார்.

தாம்பரம், 

தாம்பரத்தை அடுத்த பீர்க்கங்காரணை, காமராஜ் நகர், எம்.ஜி.ஆர் தெருவை சேர்ந்தவர் அய்யனார் (வயது 38) லாரி டிரைவர். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (27). இருவரும் கடந்த 6 மாதத்துக்கு முன்புதான் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் பகுதியை சேர்ந்தவர்கள். திருமணத்துக்கு பின் பீர்க்கங்காரணை பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். அய்யனாருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

பலத்த தீக்காயம்

நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் வழக்கம்போல் தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த கிருஷ்ணவேணி, மண்எண்ணெயை ஊற்றி தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டியுள்ளார்.

அப்போது அய்யனாரும் தற்கொலை செய்வதாக கூறி தனது உடலில் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ பற்ற வைத்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணவேணி, கணவரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரது உடலிலும் தீ பற்றியது. இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

கணவன்-மனைவி சாவு

இவர்களின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அய்யனாரும், கிருஷ்ணவேணியும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து பீர்க்கன்காரனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமணமான 6 மாதத்தில் புதுமண தம்பதியினர் குடும்ப தகராறில் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story