மாநில செய்திகள்

தேர்வு கட்டணத்தை உயர்த்தியது ஏன்? சி.பி.எஸ்.இ. விளக்கம் + "||" + Select payment Why raise CBSE Description

தேர்வு கட்டணத்தை உயர்த்தியது ஏன்? சி.பி.எஸ்.இ. விளக்கம்

தேர்வு கட்டணத்தை உயர்த்தியது ஏன்? சி.பி.எஸ்.இ. விளக்கம்
தேர்வு கட்டணம் உயர்த்தியது ஏன் என்பது குறித்து சி.பி.எஸ்.இ. விளக்கம் அளித்து இருக்கிறது.
சென்னை,

சி.பி.எஸ்.இ.(மத்திய இடைநிலை கல்வி வாரியம்) 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான கட்டணத்தை நேற்று முன்தினம் அதிரடியாக உயர்த்தி இருக்கிறது. அதில் பட்டியல் இன மாணவர்களுக்கு (எஸ்.சி., எஸ்.டி.) 24 மடங்கு கட்டணத்தை உயர்த்தி சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை 2 மடங்கும் உயர்த்தி இருக்கிறது.


இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தேர்வு கட்டணம் உயர்த்தியதன் உண்மை நிலவரம் குறித்து அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

* தேர்வு கட்டணம் ஏதோ டெல்லிக்கு மட்டும் தான் அமல்படுத்தப்பட்டதாக தவறாக கூறப்படுகிறது. இந்த கட்டணம் நாடு முழுவதும் பொருந்தும். கடந்த 5 ஆண்டுகளுக்கு இடையில் தேர்வு கட்டணத்தை சி.பி.எஸ்.இ. உயர்த்தவில்லை. 5 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் உயர்த்தப்பட்டுள்ளது.

* இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சி.பி.எஸ்.இ. நிர்வாகத்துக்கு கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் இந்த கட்டணத்தை உயர்த்த சி.பி.எஸ்.இ. ஆட்சிமன்றக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

* ஒரு பாடப்பிரிவுக்கு ரூ.150 வீதம் 5 பாடங்களுக்கு ரூ.750 என்று இருந்த தேர்வு கட்டணத்தை, தற்போது ஒரு பாடத்துக்கு ரூ.300 என்ற வீதத்தில் 5 பாடங்களுக்கு ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. கண்பார்வையற்ற மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது.

* சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தின் இந்த கட்டண உயர்வு மற்ற மத்திய கல்வி வாரியத்தை விட குறைவு தான். தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனத்தில் (என்.ஐ.ஓ.எஸ்.) பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ரூ.1,800, மாணவிகளுக்கு ரூ.1,450, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.1,200 என மேல்நிலை தேர்வு கட்டணமாகவும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம், மாணவிகளுக்கு ரூ.1,750, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.1,300 என உயர்நிலை தேர்வு கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூடுதல் பாடப்பிரிவுகளுக்கும் ரூ.720-ம் வசூலிக்கப்படுகிறது.

* சி.பி.எஸ்.இ. தன்னாட்சி அந்தஸ்து பெற்றது. இது லாபம், நஷ்டம் அடிப்படையில் செயல்படாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.