மாநில செய்திகள்

மத்திய-மாநில அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் + "||" + Independence Day Celebration

மத்திய-மாநில அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

மத்திய-மாநில அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
மத்திய-மாநில அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சென்னை, 

நாட்டின் 73-வது சுதந்திர தின விழா மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சென்னை நுங்கம்பாக்கம் ஆயக்கர்பவன் வளாகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை கமிஷனர் ராஜீவ் ஜெயின் தேசிய கொடி ஏற்றினார். சென்னை துறைமுக பொறுப்பு கழக அலுவலகத்தில், தலைவர் பி.ரவீந்திரன் தேசிய கொடி ஏற்றினார். இவர் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் நிர்வாக இயக்குனராக இருப்பதால், அங்கு நடந்த சுதந்திர தின விழாவிலும் தேசிய கொடியை ஏற்றினார். சென்னை சி.எம்.டி.ஏ. வளாகத்தில் அமைந்துள்ள ஓ.என்.ஜி.சி. அலுவலகத்தில் செயல் இயக்குனர் வி.ஷியாம் மோகன் தேசிய கோடியை ஏற்றி வைத்தார்.

சென்னை ராயப்பேட்டை மற்றும் ராஜாஜி சாலையில் உள்ள இந்தியன் வங்கி அலுவலகத்தில், வங்கி நிர்வாக இயக்குனர் பத்மஜா சுந்துரு தேசிய கொடி ஏற்றினார். அண்ணாசாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலகத்தில், நிர்வாக இயக்குனர் கர்ணம் சேகர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

ரிப்பன் மாளிகை

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் சென்னையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றினார். பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில், மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தேசிய கொடி ஏற்றினார். பின்னர் அவர், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் சிறப்பாக சேவையாற்றிய சமுதாய அமைப்பாளர்கள், சமுதாய வள பயிற்றுனர்களை பாராட்டி கேடயங்களை வழங்கினார்.

எம்.ஜி.ஆர்.சத்துணவு திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 3 பணியாளர்களுக்கு காசோலை, சான்றிதழ்களையும், பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், பணியாளர்கள் 64 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

மாநகராட்சி பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரித்த தலைமை ஆசிரியர்களுக்கும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கும் பிரகாஷ் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இணை கமிஷனர் ஆர்.லலிதா, துணை கமிஷனர் கோவிந்தராவ், மதுசுதன் ரெட்டி உள்பட அதிகாரிகளும், ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

கலெக்டர் அலுவலகம்

சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், கலெக்டர் ஆர்.சீத்தாலட்சுமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தார். ஏழை-எளிய மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நா.காளிதாஸ் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தின் தலைமை அலுவலகமான பல்லவன் இல்லத்தில், மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் கோ.கணேசன் தேசிய கொடி ஏற்றினார். பின்னர் அவர், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்திய 66 ஓட்டுனர்கள், டிக்கெட் கட்டணத்தில் அதிகபட்சம் வசூல் தொகை ஈட்டிய 33 நடத்துனர்கள், அதிகபட்ச அபராத தொகை வசூலித்த 10 டிக்கெட் பரிசோதகர்கள் உள்பட 175 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு காசோலைகள் வழங்கினார்.

மெட்ரோ ரெயில்

கோயம்பேட்டில் உள்ள சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில், மேலாண்மை இயக்குனர் பங்கஜ் குமார் பன்சல் தேசிய கொடி ஏற்றினார். மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு இடையே செஸ், கேரம், டென்னீஸ் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பங்கஜ் குமார் பன்சல் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர்கள் சுஜாதா ஜெயராஜ், நரசிம் பிரசாத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில், மாநில் தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தேர்தல் ஆணையரின் செயலாளர் சு.பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

நுகர்வோர் தீர்ப்பாயம்

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில், வருவாய் நிர்வாக கமிஷனர் கே.சத்யகோபால் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு வக்பு வாரிய தலைமை அலுவலகத்தில், முதன்மை செயல் அலுவலர் நூ.ஷே.முகமது அஸ்லம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

தமிழ்நாடு மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதியும், தீர்ப்பாயத்தின் தலைவருமான எஸ்.தமிழ்வாணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இதில், லோக் ஆயுக்தா உறுப்பினர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம், தீர்ப்பாய உறுப்பினர் பாஸ்கரன், பதிவாளர் மேத்யூ எட்டி, தீர்ப்பாய தனி செயலாளர் சங்கரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.