மகள் வருவதில் தாமதம் பரோலை நீட்டிக்கக்கோரி உள்துறை செயலாளருக்கு நளினி மனு


மகள் வருவதில் தாமதம் பரோலை நீட்டிக்கக்கோரி உள்துறை செயலாளருக்கு நளினி மனு
x
தினத்தந்தி 15 Aug 2019 10:00 PM GMT (Updated: 15 Aug 2019 8:12 PM GMT)

மகள் வருவதில் தாமதம் ஆவதால் மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கக்கோரி உள்துறை செயலாளர், சிறைத்துறை தலைவருக்கு நளினி மனு அனுப்பி உள்ளார்.

வேலூர், 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய சிறையிலும், நளினி பெண்கள் சிறையிலும் கடந்த 28 வருடங்களாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இவர்களுடைய மகள் ஹரித்ரா லண்டனில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

திருமண ஏற்பாட்டிற்காக நளினி 6 மாதம் பரோல் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருக்கு ஒரு மாதம் மட்டுமே பரோல் வழங்கப்பட்டது. கடந்த மாதம் 25-ந் தேதி பரோலில் வெளியே வந்த நளினி, சத்துவாச்சாரியில் தங்கி தினமும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

பரோலை நீட்டிக்க மனு

கடந்த 13-ந் தேதி வேலூர் சிறையில் உள்ள கணவர் முருகனை, நளினி சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் தங்கள் மகள் திருமணம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நளினியின் மகள் ஹரித்ரா தமிழகம் வருவதில் தாமதம் ஏற்படுவதால் மேலும் ஒரு மாதம் பரோல் கேட்டு உள்துறை செயலாளர், சிறைத்துறை தலைவர் ஆகியோருக்கு நளினி மனு அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து நளினியுடன் தங்கி உள்ள அவருடைய தாயார் பத்மா கூறியதாவது:-

மகள் வருவதில் தாமதம்

28 ஆண்டுகளுக்கு பிறகு எனது மகள் நளினி வெளியே வந்துள்ளார். அவருடைய மகள் திருமண ஏற்பாட்டிற்காக ஒரு மாதம் பரோலில் வந்துள்ளார். இதுவரை ஹரித்ராவுக்கு மணமகனாக 4 பேரை தேர்வு செய்து வைத்துள்ளோம். அவர்களில் மணமகன் யார்? என்பதை ஹரித்ரா தான் முடிவு செய்வார்.

அவருக்கு செப்டம்பர் மாதம் வரை தேர்வு இருப்பதால், அவர் தமிழகம் வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நளினிக்கு பரோல் முடிய உள்ளதால் மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்கக்கோரி உள்துறை செயலாளர், சிறைத்துறை தலைவர் ஆகியோருக்கு நளினி மனு அனுப்பி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story