கடைசி நாளில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம், அத்திவரதர் தரிசனம் நிறைவடைந்தது - அனந்தசரஸ் குளத்துக்குள் இன்று மீண்டும் செல்கிறார்


கடைசி நாளில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம், அத்திவரதர் தரிசனம் நிறைவடைந்தது - அனந்தசரஸ் குளத்துக்குள் இன்று மீண்டும் செல்கிறார்
x
தினத்தந்தி 17 Aug 2019 12:15 AM GMT (Updated: 17 Aug 2019 12:33 AM GMT)

அத்திவரதரை கடந்த 47 நாட்களில் 1 கோடி பேர் தரிசித்து உள்ளனர். தரிசனம் நேற்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து, அத்திவரதர் சிலை இன்று மீண்டும் கோவில் குளத்துக்குள் வைக்கப் படுகிறது.

காஞ்சீபுரம்,

கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்துக் குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் அத்திவரதர் வைபவம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் அங்குள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஜூலை 31-ந்தேதி வரை சயன கோலத்தில் பக்தர் களுக்கு அருள்பாலித்த அத்திவரதர், பின்னர் கடந்த 1-ந்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்தார்.

வாழ்க்கையில் அபூர்வமாக கிடைக்கும் தரிசனம் என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளா, மராட்டியம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து அத்திவரதரை தரிசித்தனர். அத்திவரதரை சயன கோலத்தில் 43 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அப்படி தரிசனம் செய்தவர்களில் பலர், அவர் நின்ற கோலத்தில் அருள்பாலித்த போதும் அவரை தரிசிப்பதற் காக வந்தனர். பொதுதரிசன வரிசையில் பல மணி நேரம் காத்து நின்று மக்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், கலையுலகைச் சேர்ந்தவர்கள் என ஏராளமான முக்கிய பிரமுகர்களும் வந்து அத்திவரதரை தரிசித்தனர்.

முதல் 4 நாட்கள் கூட்டம் ஓரளவுதான் இருந்தது. அதன் பின்னர் தினமும் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. விடுமுறை நாட்களில் கூட்டம் கட்டுக் கடங்காமல் இருந்தது. அதிகபட்சமாக 5 லட்சம் பேர் வரை ஒரு நாளில் தரிசனம் செய்து இருக்கின்றனர்.

தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்ததால் காஞ்சீ புரம் நகரமே விழாக்கோலம் பூண்டது. விடுமுறை நாட்களில் கட்டுக்கடங்காத பக்தர்கள் திரண்டனர். இதனால் போலீசார் பக்தர்களை பகுதி பகுதியாக பிரித்து தரிசனத்துக்கு அனுப்பினார்கள்.

நடிகை நமீதா நேற்று முன்தினம் இரவு அத்திவரதரை தரிசித்தார், அவருக்கு பட்டாச்சார்யார்கள் மலர்மாலை அணிவித்தனர். தரிசனம் முடிந்ததும் நமீதா காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

கடைசி மற்றும் 47-வது நாளான நேற்று அத்திவரதருக்கு ரோஜா மற்றும் மஞ்சள் நிற பட்டாடை உடுத்தி அலங் காரம் செய்யப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலை 5.45 மணிக்கு நடை திறக்கப்பட்டு கடைசி நாள் தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு அத்திவரதர் அருள்பாலித்தார்.

கடைசி நாளான நேற்றும் அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக காலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் திணறினார்கள்.

முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனம் நேற்று முன்தினத்தோடு முடிவுக்கு வந்ததால், நேற்று பொது தரிசனம் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வந்த பக்தர்கள், குறிப்பிட்ட இடத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு சுமார் 5 கி.மீ. தூரம் நடந்து சென்று நீண்ட வரிசையில் 9 மணி நேரம் காத்து நின்று அத்திவரதரை தரிசித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமிகள் நேற்று அத்திவரதரை தரிசித்தார். அவர் ரோஜா நிற பட்டு வஸ்திரம், பச்சைக்கிளி பொம்மைகளை வழங்கினார்.

நிதித்துறை ராஜாங்க மத்திய மந்திரி அனுராக் தாக்குர், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் ஆகியோரும் நேற்று அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

கடைசி நாளான நேற்று இரவு 9 மணி வரை சுமார் 4 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரவு 9 மணி அளவில் ராஜகோபுர வாசல் மூடப்பட்டது. அப்போது கோவில் வளாகத்திற்குள் காத்திருந்த பத்தர்கள் மட்டும் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். இரவில் நீண்ட நேரம் தரிசனம் நீடித்தது. நேற்று இரவுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவடைந்தது.

நேற்று வரை அத்திவரதரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று (சனிக்கிழமை) அதிகாலை அத்திவரதருக்கு பரிகார பூஜை தொடங்குகிறது. அடுத்த 40 ஆண்டுகளுக்கு சிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சாம்பிராணி தைலம் உள்ளிட்ட மூலிகை திரவியங்கள் அத்திவரதர் சிலைக்கு பூசப்படுகிறது.

இன்று இரவு 10 மணியில் இருந்து 12 மணிக்குள் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்படுகிறது. குளத்தில் உள்ள அத்திவரதர் மண்டபத்தின் கீழ் உள்ள அறையில் அத்திவரதர் சிலை வைக்கப்படும். அதன்பிறகு குளத்தில் வழக்கம்போல் நீர் நிரப்பப்படும்.

அனந்தசரஸ் குளத்தில் ஜலவாசம் செய்யும் அத்திவரதர், 40 ஆண்டுகளுக்கு பிறகு 2059-ம் ஆண்டு மீண்டும் அருள்பாலிக்க வருவார்.

Next Story