தமிழகத்தில் இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க நடவடிக்கை-டாக்டர் ராமதாஸ் கோரிக்கை


தமிழகத்தில் இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க நடவடிக்கை-டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
x
தினத்தந்தி 17 Aug 2019 11:15 PM GMT (Updated: 17 Aug 2019 8:27 PM GMT)

தமிழகத்தில் இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சத்தீஷ்கர் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு இரு மடங்காக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் அதிக இடஒதுக்கீடு வழங்கும் 2-வது மாநிலம் என்ற பெருமையை சத்தீஷ்கர் பெற்றுள்ளது. அனைத்துத் தரப்பினருக்கும் உண்மையான சமூகநீதி வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சத்தீஷ்கர் அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, இடஒதுக்கீட்டை அதிகரிக்க சட்ட ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ எந்த எதிர்ப்பும் எழப்போவதில்லை. இடஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு மிகப்பெரிய தடையாக இருந்து வந்தது சுப்ரீம் கோர்ட்டால் விதிக்கப்பட்ட 50 சதவீத உச்சவரம்பு தான். ஆனால், உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு வசதியாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பிறகு, இடஒதுக்கீட்டு உச்சவரம்பு அர்த்தமற்றதாக மாறிவிட்டது.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் மட்டும் தான் 50 சதவீதத்துக்கும் கூடுதலான இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது மராட்டியத்தில் 78 சதவீதம், சத்தீஷ்கரில் 72 சதவீதம், அரியானாவில் 70 சதவீதம் என பல மாநிலங்களில் தமிழகத்தை விட அதிக இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் மேலாக இந்திய விடுதலைக்கு முன்பாகவே தமிழகத்தில் 100 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. மேலும், சுப்ரீம் கோர்ட்டே கூறிவிட்ட நிலையில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுக்க தடையில்லை.

எனவே, தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதனடிப்படையில் தமிழகத்தில் இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும். தேவைப்பட்டால் இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
 இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story