தமிழக அரசு அறிவிப்பு: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - நாளை முதல் அமலுக்கு வருகிறது


தமிழக அரசு அறிவிப்பு: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - நாளை முதல் அமலுக்கு வருகிறது
x
தினத்தந்தி 18 Aug 2019 12:15 AM GMT (Updated: 17 Aug 2019 10:43 PM GMT)

கொள்முதல் விலை அதிகரிப்பை தொடர்ந்து ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்ந்து உள்ளது. இந்த விலை உயர்வு நாளை (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 2 கோடியே 6 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் 25 லட்சம் லிட்டர் பால் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும் என்று கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

அதன்படி தற்போது, பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இதுபற்றிய அறிவிப்பை தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் நேற்று வெளியிட்டது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பசுந்தீவனம், கலப்புத் தீவனம், உலர் தீவனம், தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றின் விலை மற்றும் இதர இடு பொருட்களின் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் உயர்ந்துள்ளன என்று தெரிவித்து, பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

பால் உற்பத்தி, கிராமப் பொருளாதார மேம்பாட்டில் ஒரு முக்கிய பங்கு வகிப்பதையும், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டும், கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 4 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயன் அடையும் வகையில், பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 28 ரூபாயில் இருந்து 32 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 4 ரூபாய் உயர்த்தவும், எருமைப்பால் கொள் முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 35 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலையை உயர்த்துவதாலும், கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கான பால் பணப்பட்டுவாடா எவ்விதத்திலும் பாதிப்படையக்கூடாது என்பதை கருத்தில் கொண்டும், நுகர்வோர்களுக்கு நல்ல தரமான பால் தொடர்ந்து வினியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் வகையிலும், பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பதப்படுத்தும் செலவு, போக்குவரத்து மற்றும் அலுவலகச்செலவு ஆகியவை கணிசமாக உயர்ந்துள்ளதாலும், அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தப்படும்.

இந்த பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வு 19.8.2019 (நாளை) முதல் அமலுக்கு வரும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

தமிழக அரசு இதற்கு முன்பு கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை உயர்த்தியது. அப்போது பச்சை, நீலம், ஆரஞ்சு, மெஜந்தா நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்ந்தது.

நீலம் (நிலைப்படுத்தப்பட்டது) ஒரு லிட்டர் பால் அட்டைக்கு ரூ.34, சில்லரை விற்பனை ரூ.37 ஆகவும், பச்சை (சமன்படுத்தப்பட்டது) பால் அட்டைக்கு ரூ.39 ஆகவும், சில்லரை விற்பனை ரூ.41 ஆகவும் இருந்தது. ஆரஞ்சு (கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்டது) பால் அட்டைக்கு ரூ.43 ஆகவும், சில்லரை விற்பனை ரூ.45 ஆகவும் இருந்தது. மெஜந்தா (கொழுப்பு சத்து நீக்கப்பட்டது) பால் அட்டைக்கு ரூ.35 ஆக இருந்தது.

5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டு இருக்கிறது. நீலம் (நிலைப்படுத்தப்பட்டது) ஒரு லிட்டர் பால் அட்டைக்கு ரூ.40 ஆகவும், சில்லரை விற்பனை ரூ.43 ஆகவும், பச்சை (சமன்படுத்தப்பட்டது) பால் அட்டைக்கு ரூ.45 ஆகவும், சில்லரை விற்பனை ரூ.47 ஆகவும் உயர்ந்து உள்ளது.

ஆரஞ்சு (கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்டது) பால் அட்டைக்கு ரூ.49 ஆகவும், சில்லரை விற்பனை ரூ.51 ஆகவும், மெஜந்தா (கொழுப்பு சத்து நீக்கப்பட்டது) பால் அட்டைக்கு ரூ.41 ஆகவும் உயர்ந்து இருக்கிறது.

ஆவின் பால் விலை உயர்ந்ததை தொடர்ந்து, ஆவினின் மற்ற தயாரிப்புகளான வெண்ணெய், நெய் உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயர இருக்கிறது.

மாத அட்டைதாரர்கள் கூடுதலாக ரூ.180 கட்டவேண்டும்

பால் விலை ரூ.6 உயர்த்தப்பட்டதை தொடர்ந்து மாதாந்திர பால் அட்டை வைத்திருப்பவர்கள் இனி மாதந்தோறும் லிட்டருக்கு கூடுதலாக ரூ.180 கட்ட வேண்டி இருக்கும்.

நாளை (திங்கட்கிழமை) முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வர உள்ளதால், இந்த மாதத்திற்கான இடைப்பட்ட நாட்களுக்கான கூடுதல் தொகையை மாதாந்திர வாடிக்கையாளர்கள் கட்ட வேண்டி இருக்கும்.

Next Story