‘அரசின் ஓய்வூதிய திட்டம் வெற்றி பெற தபால் துறை முக்கிய பங்கு வகிக்கிறது’ தலைமை செயலாளர் கே.சண்முகம் பேச்சு


‘அரசின் ஓய்வூதிய திட்டம் வெற்றி பெற தபால் துறை முக்கிய பங்கு வகிக்கிறது’ தலைமை செயலாளர் கே.சண்முகம் பேச்சு
x
தினத்தந்தி 20 Aug 2019 10:58 PM GMT (Updated: 20 Aug 2019 10:58 PM GMT)

‘அரசின் ஓய்வூதிய திட்டம் வெற்றி பெறுவதற்கு தபால் துறை முக்கிய பங்கு வகிக்கிறது’ என்று தலைமைச் செயலாளர் கே.சண்முகம் கூறினார்.

சென்னை,

தபால் துறை சார்பில் சென்னை மண்டல அளவில் 2018-19-ம் ஆண்டில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் சிறந்த அலுவலகங்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவுக்கு சென்னை மண்டல தபால் துறை தலைவர் ஆர்.ஆனந்த் தலைமை தாங்கினார். தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் விருதுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

தொழில்நுட்ப வளர்ச்சியால் பல தொழில்கள் இருந்த இடம் தெரியாமல் போனது. கடிதம் எழுதும் நிலை மாறி இ-மெயில் என்று எல்லாம் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தது. ஆனாலும் தபால் துறையினர் சோர்ந்து போகவில்லை. கடினமாக உழைத்து போட்டியான உலகில் லாபம் ஈட்டும் வகையில் செயல்படுவது பாராட்டுக்குரியது.

அரசின் ஓய்வூதிய திட்டம் வெற்றி பெறுவதற்கு தபால் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமங்களில் வசிப்பவர்களுக்கு கைகளிலேயே தபால் துறை ஓய்வூதிய தொகையை வழங்குவது மதிப்பான செயலாக பார்க்கப்படுகிறது.

கடன் திட்டங்கள் போன்றவற்றை செயல்படுத்துவதன் மூலம் பொருளாதார குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது. அதேபோல் காப்பீடு போன்ற திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவது பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டிளித்தபோது கூறிய தாவது:-

முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் டெல்டா பாசன கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை பொதுமக்கள் துணையுடன் அதிகாரிகள் செய்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் பொதுமக்களை எளிதாக சென்று சேர வேண்டும் என்பதற்காகவும், திறமையான நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதற்காக பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு வருகிறது’.

முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம் என்பது தொழில்துறையை மேம்படுத்தும் முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடர்ச்சியே ஆகும். வெளிநாட்டு பயணத்தின் போது முதல்-அமைச்சர் தொழில் அதிபர்களை சந்திக்க உள்ளார். தமிழகத்தில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து அவர்களிடம் எடுத்துரைப்பார். இதன் மூலம் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும்.

ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை கடந்து செல்ல அரசு கடுமையாக உழைக்க வேண்டும். அதை அரசு செய்து வருகிறது. தற்போது மின்சார வாகனங்கள் தயாரிக்கும் துறையாக ஆட்டோ மொபைல் துறை மாறிவருகிற தருணம் இது. அதில் அரசு கவனம் செலுத்துகிறது.

குடிமராமத்து பணிகள் மூலம் ஓரிரு ஆண்டுகளில் நீர்நிலைகள் முற்றிலுமாக சீர்செய்யப்படும். நீர்நிலைகளை பாதுகாக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் உதவியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story