70% கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்; தண்ணீர் லாரி உரிமையாளர்களிடம் அரசு உறுதி


70% கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்; தண்ணீர் லாரி உரிமையாளர்களிடம் அரசு உறுதி
x
தினத்தந்தி 21 Aug 2019 5:45 AM GMT (Updated: 21 Aug 2019 5:45 AM GMT)

70% கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தண்ணீர் லாரி உரிமையாளர்களிடம் அரசு உறுதியளித்து உள்ளது.

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலையில் தற்போது தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.முருகன் கூறியதாவது:-

நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பது ஏதோ திருட்டு போல அரசு முத்திரை குத்தி வருகிறது. செழிப்பான நிலத்தடி நீர்மட்டம் உள்ள இடங்களில் தண்ணீரை உறிஞ்சி அதை தேவைப்படும் இடங்களுக்கு சென்று மக்களிடம் வினியோகம் செய்கிறோம். இதற்காக முறையான உரிமம் கேட்டு பல ஆண்டுகளாக அரசிடம் வேண்டுகோள் விடுத்து வருகிறோம். ஆனால் அரசு எங்களை மதிக்கவே இல்லை.

விவசாய கிணறுகளில் உரிமையாளர் அனுமதியுடன் தண்ணீர் எடுக்க உரிமம் வழங்க வேண்டும், தண்ணீர் லாரிகளை சிறைபிடித்து, உரிமையாளர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்வதை காவல்துறை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட எங்களது பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் முதற்கட்டமாக இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்து உள்ளோம். இதனால் 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் லாரிகள் இயங்காது என கூறினார்.

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் காரணமாக, சென்னை உள்ளிட்ட நகரங்களில் மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இதனிடையே, தண்ணீர் லாரி உரிமையாளர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.  இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நிஜலிங்கம், தண்ணீர் லாரி உரிமையாளர்களின் 70% கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர் என கூறினார்.

Next Story